கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை பேருந்து நிலையத்தின் அருகில், தாம்பரம் – செங்கல்பட்டு ரயில் பாதை செல்கிறது. ஆனால் ரயில் நிலையம் அமைக்கப்படவில்லை. வண்டலூர் ரயில் நிலையமும், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகருகே உள்ளன. இது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தூரம் என்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென பேருந்து நிலையம் கட்டும் போதே கோரிக்கை எழுந்தது.
ஆனால் இந்த பணிகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்த பின்னரே ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் வண்டலூர் – ஊரப்பாக்கம் இடையே ரூ.20 கோடி மதிப்பில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் இருந்து கணக்கிட்டால் 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. 3 நடைமேடைகள், நிலைய மேலாளர் அறை, பார்க்கிங் வசதி, டிக்கெட் அலுவலகம், கண்காணிப்பு கேமராக்கள், நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக பணிகள் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பணிகள் வேகமெடுத்தது. மார்ச் மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரயில் நிலையத்தின் முகப்பு பகுதி மற்றும் நடைமேம்பாலம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே சார்பில் தமிழக அரசுக்கு சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க தெற்கு ரயில்வேக்கு தேவையான இடங்களை கையகப்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. தற்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் 50 சதவீதம் முடிவடைந்து உள்ளது. நடைமேடை, சுற்றுச்சுவர், மின் இணைப்பு, மேற்கூரை அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது.
விரைவில் இப்பணிகள் முடிவடைய வாய்ப்பு உள்ளது. முகப்பு பகுதி மற்றும் நடை மேம்பாலம் அமைக்க தேவையான இடங்களை கையகப்படுத்திய பின்னர், பணிகள் விரைவாக முடிவடையும். அதன்படி, வரும் ஜூலை மாத இறுதிக்குள் ரயில் நிலையப் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது, என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் இருந்து கணக்கிட்டால் 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்படுகிறது. 3 நடைமேடைகள், நிலைய மேலாளர் அறை, பார்க்கிங் வசதி, டிக்கெட் அலுவலகம், கண்காணிப்பு கேமராக்கள், நடைமேம்பாலம், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
The post கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ஜூலை மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு திறப்பு: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.