* பிளாட்களாகும் விளைநிலங்கள்
* மாற்றுத் தொழில் தேடும் விவசாயிகள்
வருசநாடு: தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் காரணங்களால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விளைநிலங்கள் பிளாட்களாக மாறி வருகின்றன. விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி வெளியூர்களுக்கு செல்கின்றனர். தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, வருசநாடு, மூலக்கடை, குமணன்தொழு ஆகிய பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. ஆற்று நீர் பாசனம், கிணற்றுப் பாசனம், ஆழ்துளை கிணறு பாசனம் ஆகியவை மூலம் தோப்புகளுக்கு நீர்பாய்ச்சி வருகின்றனர். இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால் தென்னந்தோப்புகள் அழிந்து வருகின்றன.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக தோப்புகளில் தென்னை மரங்கள் அழிக்கப்பட்டு பிளாட்களாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். மேலும், இடி, மின்னல் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுகின்றன. வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன. இதனால், விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி திருப்பூர், கோவை மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். எனவே, கடமலை-மயிலை ஒன்றியத்தில் தென்னை சாகுபடியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மயிலாடும்பாறையைச் சேர்ந்த நல்லாள் கூறுகையில், ‘தண்ணீர் பற்றாக்குறையால் தென்னை மரங்கள் பட்டுப் போகின்றன. இவைகளை அகற்றியதால் தோப்புகள் அனைத்தும் மானாவாரி நிலங்களாக மாறி வருகின்றன. தென்னை சாகுபடியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
பட்டிவீரன்பட்டியில் அகற்றப்படும் தென்னை மரங்கள்
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடந்து வருகிறது. இந்நிலையில் தோப்புகளில் மிகவும் வயதான மரங்கள், காய்க்கும் தன்மை இழந்த மரங்கள் மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வருகிறது. இது குறித்து தென்னை விவசாயிகள் சிலர் கூறுகையில், ‘‘தென்னந்தோப்புகளில் நோய் தாக்குதல் மற்றும் வயதான மரங்களை அகற்றி வருகிறோம்.
இந்த மரங்களை மரஅறுவை மில்களுக்கும், செங்கல் தொழிற்சாலைகளுக்கும் வாங்கி செல்கின்றனர். மீண்டும் நிலத்தை தயார் செய்து புதிதாக நாட்டுரக தென்னங்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம். தற்போது அதிகமாக ஹைபிரிட் தென்னங்கன்றுகள் வருகிறது. இவை குறைந்த வருடத்தில் காய்க்க தொடங்கும். ஆனால் நாளாக நாளாக காய்க்கும் தன்மையை இழந்துவிடும். நாட்டு ரக தென்னங்கன்றுகள் பலன் தர அதிக வருடங்களாகும். ஆனால் 50 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பலன் தரும்’’ என்றனர்.
The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் அழிக்கப்படும் தென்னந்தோப்புகள் appeared first on Dinakaran.