மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பன்னாட்டு முனையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. இதையடுத்து பன்னாட்டு முனையத்தில் ஏற்கெனவே இருந்த 72 செக்கிங் கவுன்டர்கள், தற்போது 120 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை விமான நிலையத்தில் இதுவரை நாளொன்றுக்கு உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் சுமார் 50 முதல் 55 ஆயிரம் வரை பயணிகளின் எண்ணிக்கை இருந்தது. தற்போது கோடை விடுமுறை துவங்குவதை முன்னிட்டு, அதன் எண்ணிக்கை 60 ஆயிரத்தையும் கடந்து செல்கிறது. குறிப்பாக பன்னாட்டு முனையமான டெர்மினல் 2 பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
நள்ளிரவு, அதிகாலை மற்றும் வார கடைசி நாட்கள், ஒரே நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு விமானங்கள் புறப்பட்டு செல்வதால் டெர்மினல் 2 பகுதியில் பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. பன்னாட்டு முனையத்தில் தற்போது கவுன்டர்கள் ஏ, பி, சி என்ற 3 பிரிவுகளாக பயணிகளின் பாதுகாப்பு சோதனை நடக்கிறது. இதில் ஒரு பிரிவுக்கு 24 கவுன்டர்கள் வீதம் 3 பிரிவுகளில் மொத்தம் 72 கவுன்டர்கள் இயங்கி வருகின்றன. இந்த கவுன்டர்களில் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு, விமானங்களில் ஏறுவதற்கு காலதாமதமாகி வருகின்றன. இதனால் துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, லண்டன் உள்பட பல்வேறு விமானங்கள் புறப்பாடு தாமதமாகின்றன.
இதைத் தொடர்ந்து, கோடை விடுமுறை நாட்களில் பயணிகளின் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னை விமானநிலைய டெர்மினல் 2 பன்னாட்டு முனையத்தில் கூடுதல் செக்கிங் கவுன்டர்களை ஏற்படுத்த இந்திய விமானநிலைய ஆணையம் துரித நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது பேஸ் 2 மற்றும் டெர்மினல் 3ன் கட்டுமானப் பணிகள் வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிந்து டெர்மினல் 3ல் அமைக்கப்படும் 48 செக்கிங் கவுன்டர்கள், டெர்மினல் 2டன் இணைக்கப்பட்டு 120 கவுன்டர்களாக, புதிதாக டி, இ பகுதிகளாக உருவாக்க திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.
கடந்த சில நாட்களாக இந்த கூடுதல் கவுன்டர்களில் சோதனை அடிப்படையில் நள்ளிரவு, அதிகாலை மற்றும் நெரிசல் நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ஏர்இந்தியா, எமிரேட்ஸ், இண்டிகோ நிறுவனங்களின் சர்வதேச விமானப் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்த கூடுதல் கவுன்டர்கள் வரும் வாரங்களில் நிரந்தரமாக செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, பாதுகாப்பு சோதனை முடிந்து பயணிகள் விமானத்தில் ஏறச் செல்வதற்கான ரிமோட் போர்டிங் கேட்களும் கூடுதலாக ஏற்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் பயணிகளுக்கு கூடுதல் வழிகளும் ஏற்படுத்தப்படுகின்றன.
இந்த கூடுதல் செக்கிங் கவுன்டர்களில் முதல்கட்ட சோதனை அடிப்படையில் ஏர்இந்தியா, எமிரேட்ஸ், இண்டிகோ நிறுவனங்களின் சர்வதேச விமான பயணிகள் மட்டுமே பயன்படுத்தி வந்தாலும், விரைவில் மற்ற விமான நிறுவனங்களான சிங்கப்பூர், பிரிட்டிஷ், கத்தார், மலேசியன் ஏர்லைன்ஸ் உள்பட மேலும் சில விமான நிறுவன பயணிகளின் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து 2025ம் ஆண்டு கோடை விடுமுறையில் பயணிகளின் கூட்ட நெரிசலை இதுபோன்ற ஏற்பாடுகளை செய்து சமாளித்துவிட சென்னை விமானநிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 2026ம் ஆண்டு, கோடை விடுமுறையில் பயணிகள் கூட்ட நெரிசலை எதிர்கொள்வதற்கு பேஸ் 2 பணிகள் முடிந்து, டெர்மினல் 3 திறப்பு விழாவும் நடந்துவிடும்.
அதில் மேலும் 72 செக்கிங் கவுன்டர்கள், கூடுதல் ரிமோட் போர்டிங் கேட்கள், பயணிகள் செல்வதற்கான கூடுதல் வழிகள் ஏற்படுத்தப்பட்டுவிடும். எனவே, சென்னை விமானநிலையத்தின் உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்களில் கூட்ட நெரிசலின்றி பயணிகள் விமானங்களில் தாமதமின்றி புறப்பட்டு செல்லலாம் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
The post சென்னை விமானநிலையத்தில் பயணிகள் செக்கிங் கவுன்டர்கள் 120 ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.