அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம் வங்கியில் பயங்கர தீவிபத்து : ஆவணங்கள் எரிந்து நாசம்

அம்பத்தூர், ஜூலை 20: அம்பத்தூரில் உள்ள வங்கியில் நேற்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு வணிக வளாகத்தில் பிரபல தனியார் வங்கி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்ததும் ஊழியர்கள், வங்கியை பூட்டி விட்டு சென்றனர். வங்கிக்கு, இரவு நேர காவலாளி ஒருவர் பணியில் இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு வங்கியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த காவலாளி, உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அம்பத்தூர் போலீசார் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அதற்குள் தீ வங்கி முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. ஜன்னல் கண்ணாடிகள், வங்கி உள்ளே இருந்த கண்ணாடி கதவுகள் உடைந்து சிதறியது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விரைந்து செயல்பட்டதால், மற்ற கட்டிடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வங்கியில் உள்ள ஆவணங்கள் மற்றும் இருக்கைகள், மேஜைகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர். அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post அம்பத்தூரில் அதிகாலை பயங்கரம் வங்கியில் பயங்கர தீவிபத்து : ஆவணங்கள் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Related Stories: