சென்னை, ஜூலை 20: சென்னை முகப்பேரில் செயல்பட்டு வந்த ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் கோல்டு லோன் என்ற நிறுவனம் நகைக் கடன் வழங்குவதாகவும், அடமானம் வைக்கும் நகைகளுக்கு முதல் 12 மாதம் வட்டி இல்லை என்றும் விளம்பரம் செய்திருந்தது. இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்நிலையில் தாங்கள் அடமானம் வைத்த தங்க நகைகளை மோசடி செய்ததாக அடமானம் வைத்தவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், கடந்த 2023 மார்ச் 30ம் தேதி சென்னை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் மோசடியில் சிக்கி நகையை பறிகொடுத்த முகப்பேரை சேர்ந்த ஜூடி இன்ஃபன்ட் மற்றும் ரஞ்சனா ஆகியோர் சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நிதி நிறுவன மோசடி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம், இந்த மனுவுக்கு போலீசார் பதில் தருமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அசோக்நகர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி அலெக்ஸாண்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தில் மனுதாரர் உள்ளிட்ட ஏராளமானோர் அடமானம் வைத்த நகைகளை முகப்பேர் ஐசிஐசிஐ வங்கி கிளை, அண்ணாநகர் சவுத் இண்டியன் வங்கி கிளை, அண்ணாநகர் கேத்தலிக் சிரியன் வங்கி கிளை ஆகிய 3 வங்கிகளில் மறு அடமானம் வைத்து மோசடி செய்துள்ளனர். அந்த வங்கிகளில் உள்ள நிறுவனத்தின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டால் வங்கி கணக்குகள் மீண்டும் திறக்கப்பட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மீண்டும் நீதிபதி முருகானந்தம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் பூ.வேலுமணியன், இ.பிரவீண் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, 3 வங்கிகளின் மேலாளர்கள் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தார். வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வங்கிகள் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாகிகள் ஆல்வின் ஞானதுரை, ராபின் ஆரோன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் ஏஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம் மற்றும் 3 வங்கிகள் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
The post அடமான நகைகளுக்கு வட்டியில்லை எனக்கூறி லட்சக்கணக்கில் மோசடி வழக்கில் 3 வங்கிகள் பதில் தர வேண்டும்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
