தண்டையார்பேட்டை ஜூலை 19: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ‘நான் ஏதோ ஒரு கருத்தை கூறிவிட்டால் உடனடியாக மாதர் சங்க அமைப்புகள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவார்கள். ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் திருமணம் ஆகி 78 நாட்களேஆன நிலையில், வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
இந்த விவகாரத்தில் மாதர் சங்க அமைப்பும், பெண்ணிய அமைப்புகளும் ரிதன்யாவிற்கு ஆதரவாக ஏன் வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார்கள். இப்பொழுது எங்கே போய்விட்டார்கள். கஞ்சா, கொக்கைன் அல்லது டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்துவிட்டு படுத்து விட்டீர்களா என்று அவசமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சீமானுக்கு எதிராக புகார் அளித்துள்ளனர். மகளிரையும் மாதர் சங்கத்திரை அவமதித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் தங்க சாலை பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார். பெண்கள் அமைப்பை சேர்ந்த ஜீவசுந்தரி பாலன், செல்வி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு, மகளிர் அமைப்புகள் குறித்து அவதூறாக பேசிய சீமானை கைது செய்ய வேண்டும், என கோஷம் எழுப்பினர்.
The post சீமானை கைது செய்ய வலியுறுத்தி மகளிர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
