பிளஸ் 2 தேர்வறையில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில், பிளஸ் 2 படித்து வரும் மாணவி, நேற்று கிருஷ்ணகிரி -திருவண்ணாமலை சாலையில் உள்ள அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடந்த உயிரியல் தேர்வினை எழுதினார். அப்போது, அந்த மாணவி தேர்வு எழுதிய அறையின் மேற்பார்வையாளராக, வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் போச்சம்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் (44) என்பவர் பணியில் இருந்தார்.

திடீரென தேர்வெழுதிக் கொண்டிருந்த அந்த மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தேர்வை சரிவர எழுத முடியாமல் திணறியுள்ளார். தேர்வு முடிந்த பின்பு வெளியே வந்த அந்த மாணவி, மிகவும் சோகத்துடன் இருந்துள்ளார். இதுகுறித்து அவர் படித்து வரும் தனியார் பள்ளியின் முதல்வர் விசாரித்துள்ளார். அப்போது, தேர்வறையில் தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்து மாணவி கதறியுள்ளார்.

இதேபோல், அதே அறையில் தேர்வெழுதிய அப்பள்ளி மாணவி ஒருவரும், தன்னிடம் ஆசிரியர் ரமேஷ் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த பள்ளியின் முதல்வர், தேர்வு மையத்தின் பொறுப்பாளரான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வத்தை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், ஆசிரியர் ரமேஷை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிளஸ் 2 தேர்வறையில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Related Stories: