ஆர்.கே.பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், காண்டாபுரம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரகுமான் (37). குவைத் நாட்டில் வேலை செய்துவிட்டு, தற்போது தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர், கடந்த 15ம்தேதி மாலை 4 மணியளவில், பள்ளியில் இருந்து குழந்தைகளை பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், பைக்கை வாசலில் நிறுத்திவிட்டு, இரவு 11.30 மணியளவில் தூங்கச் சென்றார். பின்னர் திடீரென 12 மணியளவில் வெளியே யாரோ வந்ததுபோல் சத்தம்கேட்டு வெளியே சென்று பார்த்தபோது, வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல்போய் இருந்தது.

அதிர்ச்சியடைந்த அப்துல்ரகுமான், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.பேட்டை போலீசார், பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், பைக் திருட்டில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம், நந்திவேடு தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் சரத்குமார் (22), சோளிங்கர் உடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவரின் மகன் வேணுகோபால் (22), சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரது மகன் ராஜா (28) ஆகிய 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post ஆர்.கே.பேட்டையில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: