ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தென் மாநிலங்களுக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்ற பின் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி

சென்னை: ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தென்மாநிலங்களுக்கு எதிரானது என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார். மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதுகுறித்து மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை குறித்தும் முடிவுகள் மேற்கொள்ள கடந்த 5ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த 58 கட்சிகள் கலந்து கொண்டன. அக்கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற 22ம் தேதி கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு மேற்கு வங்காளம், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்களுக்கும், ஒடிசா முன்னாள் முதல்வர் மற்றும் இந்த 7 மாநிலங்களை சேர்ந்த 29 கட்சி தலைவர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை அந்தந்த மாநில முதல்வர்கள் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நேரில் சென்று வழங்கி அழைப்பு விடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி திமுகவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த வகையில், ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தயாநிதி மாறன் எம்.பி. ஆகியோர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் பல்லா சீனிவாசராவ், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேலும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் சிறப்பு அதிகாரி வெங்கட கிருஷ்ணாவை திமுக எம்.பி. வில்சன் சந்தித்து கடிதத்தை வழங்கினார்.

இதேபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரை தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் சந்தித்து அழைப்பு விடுத்தனர். மேற்கு வங்காள எம்.பி. டெரிக் ஓ பிரையனை டாக்டர் கனிமொழி சோமு எம்.பி. சந்தித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இந்த நிலையில், தொகுதி மறுவரையறை குறித்த தென்மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கனிமொழி, ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ, அருண் நேரு உள்ளிட்ட திமுக எம்பிக்கள் நேற்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது அந்த குழுவினர் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தனர். மேலும் தொகுதி மறுவரையறையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும் அளித்தனர். அமைச்சர் கே.என்.நேரு தலைமையிலான குழுவினரின் அழைப்பை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஏற்றார்.

தொடர்ந்து ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டி: மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது. தொகுதி மறுவரையறையின் ஆபத்தை உணர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் முன்னெடுப்புக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். நடக்கப்போவது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. தென்னிந்தியாவின் தொகுதிகளை குறைக்கும் நடவடிக்கை. இது தென்மாநிலங்களுக்கு எதிரானது. இந்தியாவுக்கு அதிகமான வரி வருவாயை தென்னிந்திய மாநிலங்கள் வழங்கி வருகின்றன. தெலங்கானாவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி இந்த தொகுதி மறு சீரமைப்பு குறித்து குரல் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை தெலங்கானாவுக்கும் எதிரானது.

எனவே கிஷன் ரெட்டி இது குறித்து மத்திய அரசிடம் பேச வேண்டும். காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதி பெற்று வரும் 22ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன். இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டியில், “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென் மாநிலங்கள் முழுமையாக பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு தென் மாநில முதல்வர்களையும், எதிர்க்கட்சி தலைவர்களையும் அழைத்து மார்ச் 22ம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். அந்த கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அழைப்பதற்காக என்னை அனுப்பினார். நான் ரேவந்த் ரெட்டியிடம் கடிதம் கொடுத்து முறைப்படி அழைத்திருக்கிறேன். அவர் தனது கட்சியின் உயர்மட்ட குழுவிடம் ஆலோசித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்” என்றார்.

* கர்நாடகா சார்பில் டி.கே.சிவகுமார் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சி பங்கேற்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உங்கள் கடிதம் நான் கிடைக்கப்பெற்றேன். மாநில சுயாட்சி குறித்த பல்வேறு முக்கியமான விவகாரங்களை எழுப்பியிருக்கிறீர்கள். இந்த ஆலோசனைக் கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மார்ச் 22ம் தேதி சென்னையில் நடக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் என கூறியுள்ளார். அதேபோல், சிரோமணி அகாலிதளம் சார்பில் அதன் தலைவர் சர்தார் பல்விந்தர் சிங் புந்தர், சிரோமணி அகாலிதளம் செயலாளரும் பஞ்சாப் மாநில முன்னாள் கல்வி அமைச்சர் தல்ஜித் சிங் சீமா ஆகியோர் பங்பேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மறுவரையறை விவகாரத்தில் தொடர்ந்து போராடுவோம்…
கனிமொழி எம்பி அளித்த பேட்டியில், ‘‘தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், பஞ்சாப் ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் விவகாரம் ஆகும். இது தொடர்பாக தமிழக முதல்வர் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்க ஒரு முன்முயற்சியை எடுத்துள்ளார். அது தொடர்பாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தோம். அவரிடம் தொகுதி மறுவரையறை தொடர்பான பாதிப்புகள் குறித்து பேசினோம். அவரை வரும் 22ம் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்துக்கு தமிழக முதல்வர் சார்பாக அழைப்பு விடுத்தோம். கட்சி மேலிடத்தில் அனுமதி பெற்று பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். மேலும் இந்த தொகுதி மறுவரையறை தொடர்பான விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பார். இந்த விவகாரத்தில் மாநில உரிமையை காக்க தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தென் மாநிலங்களுக்கு எதிரானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்ற பின் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: