உபியில் பயங்கரம்; கணவரை 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவி காதலனுடன் கைது

மீரட்: உபியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி வெட்டி கொன்று 15 துண்டுகளாக கூறு போட்டார். இந்த வழக்கில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். உபி, மீரட் பகுதியை சேர்ந்த சவுரப் ராஜ்புத் (29) வணிக கப்பல் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். மீரட் இந்திரா நகரில் வசித்த சவுரப் ராஜ்புத்தின் மனைவி முஸ்கான். இந்த தம்பதிகள், 2016ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார். முஸ்கானுக்கு சவுரப்பின் நண்பரான சாஹில் மீது கள்ளக்காதல் ஏற்பட்டது. தன் மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் சவுரப்பிற்குத் தெரிந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் இருவரும் தனித்தனி வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் தனது மகளின் பிறந்தநாளில் கலந்து கொள்ள கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு சவுரப் ராஜ்புத் வந்தார். இதற்கிடையே முஸ்கானுக்கும் சாஹிலுக்கும் இடையேயான கள்ளக்காதல் தொடர்ந்ததால், அவர்கள் இருவரும் சேர்ந்து சவுரப்பைக் கொல்ல திட்டமிட்டனர். அதற்காக சவுரப்புக்கு கடந்த 4ம் தேதி உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தனர். அவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கினார். அதனை வாய்ப்பாக பயன்படுத்தி கூர்மையான ஆயுதங்களால் சவுரப்பைக் கொடூரமான முறையில் கொன்றனர். பின்னர் தனது காதலனுடன் சேர்ந்து கணவரின் உடலை 15 துண்டுகளாக மனைவி வெட்டினார். உடல் பாகங்களை அப்புறப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், வீட்டில் இருந்த டிரம்மில் போட்டனர். பின்னர் சிமெண்ட் கலவையை கொட்டி உடல் பாகங்களை டிரம்மில் போட்டு மூடினர்.

அடுத்த சில நாட்கள் கழித்து, அக்கம்பத்தினர் சவுரப் ராஜ்புத் குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போது முஸ்கான், ‘எனது கணவர் மலை வாசஸ்தலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்’ என கூறியுள்ளார். இதுகுறித்து மீரட் கூடுதல் எஸ்பி ஆயுஷ் விக்ரம்சிங் தெரிவிக்கையில்,‘‘ சவுரப் மாயமானதாக அவரது உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்படி சவுரப் ராஜ்புத்தின் மனைவி முஸ்கானையும், அவரது காதலன் சாஹிலையும் பிடித்து விசாரித்தோம். தொடர் விசாரணையில் சவுரப் ராஜ்புத் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிமெண்ட் கலவையால் மூடப்பட்டிருந்த டிரம்மை உடைத்து உடல் பாகங்களை எடுத்தோம். முஸ்கான், அவரது கள்ளக்காதலன் சாஹில் கைது செய்யப்பட்டனர்’’ என்றார்.

The post உபியில் பயங்கரம்; கணவரை 15 துண்டுகளாக வெட்டிக் கொன்ற மனைவி காதலனுடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: