உருளையாக கட்டி வைக்கப்பட்டுள்ள வைக்கோல் இலக்கியம், காப்பியம் எழுத பயன்பட்டது: பனை மரங்களின் வளர்ப்பை ஊக்கப்படுத்த வலியுறுத்தல்

 

முசிறி, மார்ச் 8: பனை மரத்தின் வேர் முதல் நுனிவரை எண்ணற்ற பயன்களை தருவதால் இந்த மரத்திற்கு கற்பகத்தரு என்று சிறப்பு பெயர் உண்டு. பனைமரத்தின் வாயிலாக 801 பயன்களை தர கூடியது. நமது சங்க இலக்கியங்களையும், புராணங்களையும், நன்னெறி நூல்களையும் நமக்கு கொடையாக அளித்த பெருமை பனை ஓலைகளையே சாரும். பழங்கால இலக்கியங்கள் ஓலைச்சுவடியிலேயே எழுதி வைக்கப்பட்டது. 34 வகை பனை மரங்கள் உள்ளதாக தரம் பிரிக்கப்பட்டுள்ளது.

பனை நுங்கு நீரை சாப்பிட்டு வந்தால் வேர்க்குரு நீங்கும், அடிக்கடி பயன்படுத்தி வந்தால் அம்மை நோயால் ஏற்படக்கூடிய உடல் வெப்பம், தாகம் ஆகியவை நீங்கும். பனங்கிழங்கிற்கு உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு. பதநீர் உடலுக்கு குளிர்ச்சியை தரும் குணம் உண்டு. பனங்கருப்பட்டிக்கு தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை சீரமைக்கும் மருத்துவ குணம் உண்டு. வெல்லத்தில் இரும்புச்சத்து மிகுந்துள்ளதால், சோகை நோய்களுக்கு நல்ல மருந்தாக அமைகிறது.

பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி விலகி வெளியே வரும். பனைமரம் மழையை வரவழைக்கும் கொடை நிறைந்த மரமாகும். பனை மரங்கள் இருக்கும் இடத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும். பனை மரங்கள் வளர்ந்திருக்கும் இடத்தில் இடி மின்னல் போன்ற பாதிப்புகள் பெருமளவு இருக்காது. ஏனென்றால் மின்னலை தன்பால் ஈர்த்துக் கொள்ளும் சக்தி பனை மரத்திற்கு உண்டு என கூறப்படுகிறது. வெளியே கரடு முரடான தோற்றத்துடன் பனைமரம் காட்சியளித்தாலும் பனைமரம் தாய்மை குணம் கொண்ட மரம் என கூறலாம்.

ஏனென்றால் மரம், பனை மட்டை, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, தச்சு வேலைக்கு பயன்படும் ரீப்பர், விறகு,பனை ஓலையால் தயாரிக்கப்படும் கலை பொருட்கள், கருப்பட்டி வெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு,பதநீர், கள்,பனை நாரினால் தயாரிக்கப்பட்ட கயிறு என அனைத்து வகையிலும் வாழ்வியலில் நம்மோடு பயணிக்கும் பனை மரத்தை நேசிப்போம். தமிழ்நாட்டில் பனை மரங்கள் பெருமளவு அழிக்கப்பட்டுள்ள சூழலில் பனை மரங்களை மீண்டும் மீட்டெடுக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்வதோடு சமூக தொண்டு நிறுவனங்கள்,

பசுமை ஆர்வலர்கள் வழியாக பனை விதைகள் நடுவதை சிறப்பு திட்டம் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என பசுமை சிகரம் அறக்கட்டளையின் நிறுவனர் யோகநாதன் மற்றும் பனை விதை விதைப்பு ஆர்வலர் பனை லோகநாதன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் பனை மரங்களை மீட்டு எடுக்கும் அவசியத்தை வலியுறுத்தி விவசாயிகள் சமூக அமைப்புகள் பசுமை ஆர்வலர்களை ஒன்றிணைத்து சிறப்பு கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி, அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

The post உருளையாக கட்டி வைக்கப்பட்டுள்ள வைக்கோல் இலக்கியம், காப்பியம் எழுத பயன்பட்டது: பனை மரங்களின் வளர்ப்பை ஊக்கப்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: