வேலூர், ஜன.10: வேலூர் மாவட்டத்தில் 4.51 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று வேலூர் கற்பகம் சூப்பர் மார்க்கெட் வளாக ரேஷன் கடையில் தொடங்கி வைத்தார். 2025ம் ஆண்டு, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும், தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, சென்னை சைதாப்பேட்டையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதேபோல், வேலூர் மாவட்டத்தில், 699 ரேஷன் கடைகளில் 4,51,047 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள், 363 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 4,51,410 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ஏதுவாக கடந்த 2ம் தேதி முதல் வரும் நேற்று 8ம் தேதி வரை குடும்ப அட்டைதார்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கும் பணி நேற்று 9ம் தேதி தொடங்கியது. இதற்காக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்பரிசு தொகுப்பு வழங்கும் பணியை நேற்று காலை 9.30 மணியளவில் வேலூர் அண்ணா சாலை கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி வளாகத்தில் உள்ள ரேஷன் கடையில் கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் சுனில்குமார், மண்டல குழு தலைவர் நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ஆர்டிஓ பாலசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஐயப்பதுரை, வட்ட வழங்கல் அலுவலர் நெடுமாறன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 4.51 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் கலெக்டர் தொடங்கி வைத்தார் வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.