வேலூர், ஜன.6: வேலூரில் 2 மையங்களில் நடந்த டாக்டர் பணியிடங்களுக்கான கணினி வழி தேர்வில் 442 பேர் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான மருத்துவப்பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பெறப்பட்டன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கான கணினி வழி தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு கடந்த டிசம்பர் மாதம் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் டாக்டர் பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு நடந்தது. வேலூர் தோட்டப்பாளையம் அம்பாலால் வளாகத்திலும், அடுக்கம்பாறை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும் என இரண்டு மையங்களில் இத்தேர்வு நடந்தது. தேர்வு காலை 9 மணி முதல் 12.15 மணி வரை நடந்தது. வேலூர் அம்பாலால் வளாகத்தில் 500 பேருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டதில் 382 பேர் ஆஜராகினர். அடுக்கம்பாறை வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 82 பேருக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதில் 60 பேர் தேர்வு எழுதினர். இரண்டு மையங்களிலும் சேர்த்து மொத்தம் 442 பேர் தேர்வு எழுதினர். 140 பேர் ஆப்சென்டாகினர். தேர்வுக்கூடங்களில் மடிகணினிகள், கையடக்க கணினிகள், மொபைல் போன்கள், கால்குலேட்டர்கள் என எலக்ட்ரானிக் பொருட்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் தேர்வுக்கூடத்திற்கு 8.30 மணிக்கு மேல் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நெடுந்தூர மாவட்டங்களில் இருந்து 8.30 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அங்கு அவர்களை சமாதானப்படுத்தி பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
The post டாக்டர் பணியிடங்களுக்கான கணினிவழி தேர்வு வேலூரில் 2 மையங்களில் நடந்தது மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் appeared first on Dinakaran.