குடியாத்தம், ஜன. 9: குடியாத்தத்தில் மாதந்தோறும் 1100 செலுத்தினால் இரட்டடிப்பு மளிகைப் பொருட்கள் தருவதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் பணம் மோசடி செய்யப்பட்டதால் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கமலாபுரம் கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் குடியாத்தம் நேதாஜி சிலை சந்திப்பில் கடை ஒன்று வாடகைக்கு எடுத்து அரிசி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு மாதம் தோறும் 1100 ரூபாய் செலுத்தினால் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் இரட்டிப்பாக இதற்கான அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவித்தார்.
இதனை நம்பி குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாதந்தோறும் 1100 ரூபாய் செலுத்தி வந்தனர். தற்போது 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் செலுத்தும் தொகை நிறைவடைந்தது. இதற்கான பொருட்களை வழங்கப்படவில்லையாம். மேலும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த கடை பூட்டப்பட்டுள்ளது. இதன் உரிமையாளருக்கு செல்போன் மூலம் மக்கள் தொடர்பு கொண்டால் சுவிட்ச் ஆப் என வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஆவேசம் அடைந்து நேற்று கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் திடீர் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பாக காணப்பட்டது.
The post இரட்டிப்பு மளிகை பொருட்கள் தருவதாக 1000 பேரிடம் மோசடி கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் குடியாத்தத்தில் மாதந்தோறும் ₹1100 செலுத்தினால் appeared first on Dinakaran.