நெல்லை, ஜன.9: பணகுடி அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2.5 பவுன் நகையை பறித்து தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பணகுடியைச் சேர்ந்தவர் ஆனந்தி (75). இவர் கடந்த 2ம் தேதி பாபநாசத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் செல்லும் பஸ்சில் பணகுடிக்கு பயணம் செய்தார். அந்த பஸ்சில் ஏறும்போது ஆனந்தி 2.5 பவுன் நகையை அணிந்து சென்றார். பின்னர் அவர் பணகுடி பஸ் நிறுத்தத்தில் இறங்கியவுடன் அவரது கழுத்தை பார்த்த போது அவர் அணிந்து இருந்த 2.5 பவுன் நகை மாயமானதை அறிந்து பதறினார். அப்போது அவர் தன்னுடன் பயணித்த மர்ம நபர் நகையை பறித்துச்சென்றதாக கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், ஆனந்தியை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். அதன்பின்னர் அவர்களது அறிவுரையின் படி ஆனந்தி நேற்று முன்தினம் பணகுடி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பணகுடி போலீசார் மூதாட்டியிடம் நகை பறித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
The post பணகுடி அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகை பறிப்பு appeared first on Dinakaran.