மாமல்லபுரம், ஜன.9: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நாளை கோலாகலமாக தொடங்க உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 10வது ஆண்டாக தமிழ்நாட்டில் இந்த பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய 3 இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் பலூன் திருவிழா மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இசிஆர் சாலையொட்டி நாளை (10ம் தேதி) தொடங்கி 12ம் தேதி வரை, 3 நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும், பலூன் திருவிழாவுக்காக திருவிடந்தையில் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில் முதன் முறையாக பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இதில், பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் கலந்துகொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்களை பறக்க விட உள்ளனர் என்று கூறினர்.
The post திருவிடந்தையில் 20 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நாளை கோலாகல தொடக்கம் appeared first on Dinakaran.