சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்: வெளிநபர்கள் வாக்கிங் செல்ல தடைவிதிப்பு, உணவு டெலிவரி ஊழியர்கள் உள்ளே வரக்கூடாது

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இந்த விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து மிரட்டியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் அளிப்பதற்கு காவல் நிலையத்திற்கு மக்கள் வருவதற்கே பயப்படும் நிலைதான் தற்போது உள்ளது. அரசு அதிகாரிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யும் என உத்தரவிட்டனர். அதோடு, பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து கல்வி கட்டணம், விடுதிக் கட்டணம் என ஏதும் அண்ணா பல்கலைக்கழகம் வசூலிக்கக் கூடாது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளில் பதிவு செய்யப்படும் எப்ஐஆர் வெளியாகாமல் இருப்பதை காவல்துறை ஆணையர் உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி, அண்ணாநகர் துணை கமிஷனர் புக்யா சினேகா பிரியா, ஆவடி துணை கமிஷனர் அய்மன் ஜமால், சேலம் துணை கமிஷனர் பிருந்தா ஆகிய 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக சேர்க்கப்பட்ட போலீசார் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தவிர வெளிநபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அனைவரும் அடையாள அட்டைகளை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, அண்ணா பல்கலை பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் சைக்கிள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வகுப்பு மற்றும் விடுதி நேரங்களில் மாற்றம் இல்லை.

* கட்டுமான தொழிலாளர்கள் எந்த சூழ்நிலையிலும் வேலை நேரத்திற்கு பிறகு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்க கூடாது. கட்டுமானத் தொழிலாளர்கள் ஏதேனும் வேலை செய்து முடித்துவிட்டு உடனே வெளியே செல்ல வேண்டும்.

* மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பணியாளர்களை மட்டுமே வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும். வெளிநபர்கள் நடை பயிற்சி செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

* மாலை, இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரோந்து செல்ல வேண்டும். வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் நிறுத்தப்பட்டால் போலீசில் புகார் அளிக்கப்படும்.

* ஆன்லைன் நிறுவன டெலிவரி ஊழியர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழக நுழைவாயில் வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மாணவர்கள் எப்போதும் தங்கள் அடையாள அட்டையை அணிந்திருக்க வேண்டும்.

* பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சி.சி.டி.வி கேமரா, மின் விளக்குகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

* பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டறிய வேண்டும். மாணவர்களுடைய பாதுகாப்பிற்காக காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு மாணவிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் கூறப்பட்டுள்ளது.

* கல்லூரிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் வருபவர்களின் வாகன எண், செல்போன்கள் எண்கள் ஆகியவற்றையும் பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். வெளி நபர்கள் வளாகத்தில் உள்ளே வந்து செல்ல அனுமதி இல்லை.

* இதை பல்கலைக்கழக பேராசிரியர்களும் மாணவர்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதேபோல பல்கலைக்கழக மற்ற பணியாளர்களும் இவற்றை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாவலர்கள் ரவுண்ட்ஸ் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் இன்று முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்: வெளிநபர்கள் வாக்கிங் செல்ல தடைவிதிப்பு, உணவு டெலிவரி ஊழியர்கள் உள்ளே வரக்கூடாது appeared first on Dinakaran.

Related Stories: