சாமியார்மடம்: சாமியார்மடம் அருகே வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளியாடி சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் சுற்று வட்டார பகுதிகளான வாள்வச்சகோஷ்டம்- ஏ, வாள்வச்சகோஷ்டம்- பி, கப்பியறை-ஏ, கப்பியறை-பி, நட்டாலம்-ஏ, நட்டாலம்-பி, மருதூர்குறிச்சி, உண்ணாமலைகடை ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் சொத்து மற்றும் ஆவணங்களை இந்த சார் பதிவாளர் அலுவலகத்திலேயே பதிவு செய்ய வேண்டும். இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 ஆவண எழுத்தர்கள் உள்ளனர். மேலும் அருகில் உள்ள குழித்துறை, தக்கலை, வேர்க்கிளம்பி போன்ற பகுதிகளை சார்ந்த ஆவணம் எழுதுபவர்களும் இங்கு வந்து ஆவணங்கள் பதிவு செய்வது வழக்கம். இங்கு தினமும் சராசரியாக 40 முதல் 50 ஆவணங்கள் பதிவு செய்யப்படும்.
இந்த நிலையில் நேற்று (06/01/2025) திங்கட்கிழமை சார் பதிவாளர் விடுமுறை என்பதால் பொறுப்பு அலுவலர் அந்தப் பணியை மேற்கொண்டு இருந்தார். சொத்துக்களை பதிவு செய்வதற்கு காலையிலிருந்து ஆவண எழுத்தர்களும் பொதுமக்களும் வந்த நிலையில் லாக் இன் ஆகவில்லை என்று கூறி காலை முதல் மாலை நான்கு மணி வரை ஒரு ஆவணமும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் ஆவணங்கள் பதிவு செய்ய வந்த ஆவண எழுத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
The post பள்ளியாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவுகள் பாதிப்பு appeared first on Dinakaran.