கே.வி‌.குப்பம் அருகே பருவமழை பெய்தும் 4 ஆண்டுகளாக நிரம்பாத ராஜா தோப்பு அணை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை


கே.வி‌.குப்பம்: ேக.வி.குப்பம் அருகே பருவமழை பெய்தும், ராஜா ேதாப்பு அணை நிரம்பி 4 ஆண்டுகளாகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மோர்தானா அணையானது, பல்வேறு ஆறுகள், ஏரிகளுக்கு அதன் உபரி நீர் சென்று பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நீர் பாசன ஏற்படும் வகையில் கட்டபட்டவையாகும். இதற்கடுத்ததாக கே.வி.குப்பம் தாலுகா செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்டது ராஜா தோப்பு அணையும் இதே சிறப்புடன் கட்டபட்டவையாகும். 24.57 அடி உயரம் கொண்ட மாவட்டத்தின் இரண்டாம் பெரிய அணை என்ற சிறப்பு ராஜா தோப்பு அணைக்கு உண்டு.

தமிழக- ஆந்திரா எல்லையில் உள்ள மலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையிலும், விவசாயத்திற்கும் பயன்படுத்தும் வகையிலும், கடந்த 1991ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் இந்த அணையை கட்டி திறந்து வைத்தார். அணை திறப்பை தொடர்ந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2015 ஆண்டு டிசம்பரில் அணை நிரம்பியது. இதனையடுத்து 2017 ஆண்டு நவம்பரில் நிரம்பியது. இந்த அணை இதுவரை 7 முறைக்கு மேல் நிரம்பி உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் நிரம்பியது.

இந்நிலையில் தற்போது இந்த அணையின் முழு கொள்ளளவான 20.54 மில்லியன் கன அடியில் வெறும் 5 அடி வரை கூட நீர் நிரம்பாமல் உள்ளதாக கே.வி.குப்பம் தாலுகா விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஏரி நிரம்பினால் இங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் லத்தேரி உட்பட 5 ஏரிகளுக்கு சென்று சேரும் வகையில் சுற்றுப்புற கிராமத்தினர் ராஜா தோப்பு நீரை குடிநீராகவும் பயன்படுத்துவர். இதற்கு ராஜா தோப்பு கூட்டுக்குடிநீர் என்ற பெயரிலும் ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. அணை கட்டிய சில ஆண்டுகளில் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது. மேலும் கோடைகாலத்தில் அந்தபகுதியில் உள்ள விவசாயப்பணிகளுக்காகவும், குடிநீர் பிரச்னையை போக்கவும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு வந்தனர்.

ஆனால் சில ஆண்டுகளாக போதுமான தண்ணீர் இல்லாததால் அணையை திறந்து விடுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். நீர்ப்பிடிப்பு பகுதி, கரைகள் பாதுகாப்பு, அணையின் உறுதி தன்மை, நீர்ப்பிடிப்பு பகுதியில் தேங்கிய மணலை அப்புறப்படுத்தாது, அணையில் தண்ணீர் கசிவு, அணையின் அடிப்பகுதியில் மண் அரிப்பு, அணையில் உள்ள மதகுகள், தண்ணீர் வழிந்தோடிகள் என அணையை முழுமையாக ஆய்வு செய்து அவற்றை சீரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொள்ள வேண்டும் என்றும், சுமார் 4 ஆண்டுகள் ஆகியும் அணை நிரம்பாமலேயே உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கே.வி‌.குப்பம் அருகே பருவமழை பெய்தும் 4 ஆண்டுகளாக நிரம்பாத ராஜா தோப்பு அணை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: