பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இளம்பெண்ணை ஆசிட் வீசி கொன்ற வேன் டிரைவருக்கு இரட்டை ஆயுள்

நெல்லை: நெல்லை அருகே இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, ஆசிட் வீசி கொன்ற வேன் டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நெல்லை மாவட்டம், சீவலப்பேரியைச் சேர்ந்தவர் வேன் டிரைவர் ஞானதுரை என்ற சின்னராசு (38). திருமணமாகி விவாகரத்தானவர். டிரைவர் வேலைக்குச் சென்று விட்டு நெல்லையில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது சகோதரியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் திருமணமான இளம்பெண்ணிடம் பேசி வந்துள்ளார். மேலும் செல்போனிலும், நேரிலும் ஆசைவார்த்தைகள் கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். சின்னராசுவின் நடவடிக்கைகள் குறித்து அவரது மற்றொரு அக்காவிடம் இளம்பெண் கூறி அழுதுள்ளார். இதனால் சின்னராசுக்கும், அவரது அக்காவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சின்னராசு, இளம்பெண்ணை கொல்ல திட்டமிட்டுள்ளார். இதன்படி கடந்த 2016ம் ஆண்டு நவ.17ம் தேதி வண்ணார்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சமாதானம் பேச வேண்டுமென கூறி பைக்கில் ஏற வற்புறுத்தி உள்ளார். அவர் மறுக்கவே, தாக்கி பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். களக்காடு அருகே சிங்கிகுளத்தில் இருந்து வடுவூர் செல்லும் சாலையில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அவர் தப்பிக்க முயலவே, பைக்கில் வைத்திருந்த நைலான் கயிற்றால் இளம்பெண் கழுத்தை இறுக்கினார். மேலும் அவர் கொண்டு வந்த ஆசிட் பாட்டிலை எடுத்து இளம்பெண்ணின் கழுத்தில் வீசினார்.

இதில் அவர் அலறி துடிக்கவே இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த இரண்டேகால் பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினார். பின்னர் இளம்பெண் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு, 6 மாதங்கள் தொடர் சிகிச்சைக்கு பிறகு 2017 ஜூன் 2ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக களக்காடு போலீசார் வழக்கு பதிந்து சின்னராசுவை கைது செய்தனர். நெல்லை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மகிளா நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். ஞானதுரை என்ற சின்னராசுவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

The post பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று இளம்பெண்ணை ஆசிட் வீசி கொன்ற வேன் டிரைவருக்கு இரட்டை ஆயுள் appeared first on Dinakaran.

Related Stories: