சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 6.30 மணியளவில் கொச்சி செல்லும் தனியார் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படத் தயாரானது. இதில் 84 பயணிகள் மற்றும் 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 89 பேர் ஏறி அமர்ந்திருந்தனர். இந்த விமானம் ஓடுபாதையில் ஓடத் துவங்கியபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். மேலும், இதே நிலையில் விமானம் வானில் பறக்கத் துவங்கினால் பேராபத்து நிகழும் என்பதையும் விமானி உணர்ந்து, சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்தார். பின்னர் கொச்சி செல்ல வேண்டிய விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்த விமானம் இழுவை வாகனம் மூலமாக மீண்டும் புறப்பட்ட இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானத்தின் கதவுகள் திறந்ததும் பொறியாளர்கள் உள்ளே சென்றனர். அவர்கள், கொச்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை பழுதுபார்த்து சரிசெய்தனர். இதையடுத்து, சுமார் 2 மணி நேரம் தாமதமாக, இன்று காலை 8.30 மணியளவில் சென்னையில் இருந்து அதே விமானம் 84 பயணிகள் மற்றும் 5 விமான சிப்பந்திகள் என மொத்தம் 89 பேருடன் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டுபிடித்ததால், அந்த விமானத்தில் இருந்த 89 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.
The post சென்னை விமானநிலையத்தில் தொழில்நுட்ப கோளாறால் நின்ற கொச்சி விமானம்: 2 மணி நேர தாமதம் appeared first on Dinakaran.