சென்னை: தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் கவர்னர் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு. அதை மீறுவதையே தனது வழக்கமாக வைத்துள்ளார் தமிழ்நாடு ஆளுநர்.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை வெட்டியும், இல்லாததை ஒட்டியும் வாசித்த ஆளுநர் இம்முறை வாசிக்காமலேயே போயிருப்பது சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் அந்த பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
The post தனது அரசியல் சட்டக்கடமைகளை செய்யவே மனமில்லாதவர் கவர்னர் பதவியில் ஏன் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும்?: முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.