குன்றத்தூர், ஜன.5: மாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதி கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யப்படுவதாக மாங்காடு நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன. இப்புகாரின்பேரில், நகராட்சி ஆணையர் நந்தினி தலைமையில் அதிகாரிகள், மாங்காடு பகுதி கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மாங்காடு, கங்கை அம்மன் கோயில் பின்பகுதியில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்த நகராட்சி அதிகாரிகள், அந்த கடைக்கு சொந்தமான குடோனிலும் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் டீ கப்புகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அங்கு, சுமார் 10 டன் மதிப்புள்ள பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடைக்கு ₹1 லட்சம் அபராதமும் விதித்தனர். அத்துடன் பிளாஸ்டிக் விற்பனை செய்த கடையை மூடி சீல் வைத்தனர்.
நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக கடைக்குள் சோதனை மேற்கொண்ட நிலையில் கடையில் இருந்த உரிமையாளர் அங்கிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகி விட்டார். அவரை தேடும் பணியில் மாங்காடு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யும் கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும், தொடர்ந்து பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
The post மாங்காட்டில் விற்பனைக்காக பதுக்கிய 10 டன் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்: கடைக்கு ₹1 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.