காஞ்சிபுரம், ஜன.4: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்புடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு செங்கரும்பு ஆகியவை பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 665 ரேஷன் கடைகளில், பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை நெரிசல் இன்றி வாங்கிச் செல்லும் வகையில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே அவரது வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கும் பணி தொடங்கியது.அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனை வீடு வீடாக சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வரும் நிலையில், டோக்கனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் பெற்று வருகின்றனர். மேலும், தை பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசுத்தொகுப்போடு பணம் வழங்குவார்கள் என எதிர்பார்த்த தங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது என்றும், முதல்வர் கனிவுடன் பரிசீலனை செய்து பரிசுத்தொகுப்போடு பணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொங்கல் பரிசு தொகுப்பு வீடு வீடாக டோக்கன் விநியோகம் தொடக்கம் appeared first on Dinakaran.