கருங்கல் அருகே இன்று காலை பரபரப்பு; குளத்திற்குள் பாய்ந்து குப்புற கவிழ்ந்த கார்: டிரைவர் மீட்பு

கருங்கல்: கருங்கல் அருகே இன்று காலை குளத்திற்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்த காருக்குள் சிக்கியிருந்த டிரைவரை 3 பேர் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர். கருங்கல் அருகே பாலூர் வட்டகோட்டை பகுதியில் செல்லும் சாலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. இந்த பகுதியில்தான் பாலூர் குளம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை சுமார் 9.45 மணியளவில் புதுக்கடை பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி சொகுசு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. வட்டக்கோட்டை வளைவான பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் ஒரு கட்டத்தில் சாலையோரம் உள்ள குளத்திற்குள் பாய்ந்து பல்டியடித்தது. இதில் அந்த கார் சகதியில் தலைகுப்புற கவிழ்ந்ததால் அதன் 4 சக்கரங்கள் மட்டும் வெளியே தெரிந்தன.

அந்த வழியாக சென்றவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். அவர்களில் ராணுவ வீரர் உள்பட 3 வாலிபர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் குளத்திற்குள் பாய்ந்து காருக்குள் சிக்கியிருந்தவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் அந்த காருக்குள் இருந்த நபர் டிரைவர் இருக்கையில் இருந்து காரின் பின்பக்க இருக்கைக்கு மாறி வெளியேற முயற்சி செய்து கொண்டிருந்தார். இதைக்கண்டதும் துரிதமாக செயல்பட்டு அந்த நபரை உயிருடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த நபரை அதில் ஏற்றி சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் குளச்சல் தீயணைப்பு சிறப்புநிலை அலுவலர் ஜெகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

ஆனால் அதற்குள் காரில் சிக்கியிருந்தவரை பொதுமக்கள் மீட்டுவிட்டனர். இதேபோல் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த காரில் இருந்தவர் செம்மண்விளை அருகே கூட்டமாவு பகுதியை சேர்ந்த ஜெப ஜெபின் (33) என்பது தெரியவந்தது. இவர் தனது உறவினரை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கொண்டு சென்றுவிட்டுவிட்டு திரும்பி வந்தபோது வட்டகோட்டை சாலையில் இருந்த பள்ளத்தில் கார் சிக்கியதால் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. இந்த குளத்திற்குள் வாகனங்கள் விழுந்துவிடாமல் இருக்க இரும்பு தடுப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் அந்த கார் தடுப்பின் மேல் அந்தரத்தில் பாய்ந்து சென்று குளத்திற்குள் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. குளத்திற்குள் பாய்ந்த காரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

The post கருங்கல் அருகே இன்று காலை பரபரப்பு; குளத்திற்குள் பாய்ந்து குப்புற கவிழ்ந்த கார்: டிரைவர் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: