படகு இன்ஜின் பழுது 9 தமிழக மீனவர்கள் கடலில் தவிப்பு

நாகை: படகு இன்ஜின் பழுதானதால் நாகை, புதுகையை சேர்ந்த 9 மீனவர்கள் நடுக்கடலில் தவித்து வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள பட்டினச்சேரியை சேர்ந்தவர் செல்வமணி(42). இவர் தனக்கு சொந்தமான விசைப்படகில் பட்டினச்சேரி, மயிலாடுதுறை வானமாதேவி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களுடன் கடந்த 29ம் தேதி அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றார்.

நேற்று நடுக்கடலில் 9 பேரும் மீன் பிடித்து கொண்டிருந்தபோது விசைப்படகு இன்ஜினில் திடீரென பழுது ஏற்பட்டது. இதுகுறித்து நாகை மீன்வளத்துறைக்கு செல்வமணி வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொண்டு படகு இன்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் காற்றின் திசை மாறுபாட்டால் இலங்கை சர்வதேச எல்லைக்கு படகு சென்று விட்டது. எனவே தங்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

சிறிது நேரத்தில் மீனவர்களின் வாக்கி டாக்கி தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து 9 மீனவர்களை மீட்பதற்காக பட்டினச்சேரியில் இருந்து 3 விசைப்படையில் சக மீனவர்கள் நேற்றிரவு சென்றனர். ஆனாலும் நடுக்கடலில் 9 மீனவர்களை காணவில்லை.

இந்தநிலையில் 9 பேரையும் மீட்பதற்காக இலங்கை கடற்படைக்கு தமிழக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் குழும போலீசார் தகவல் தெரிவித்தனர். மேலும் மீனவர்களை மீட்டு வருவதற்காக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் இலங்கையின் சர்வதேச கடல் எல்லை பகுதிக்கு சென்றுள்ளனர். இன்று மாலை 9 மீனவர்களையும் மீட்டு நாகை அழைத்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post படகு இன்ஜின் பழுது 9 தமிழக மீனவர்கள் கடலில் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: