×

16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி: தீவிரவாதிகள் கைவரிசையா? எப்பிஐ அதிரடி விசாரணை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் கைவரிசையா என எப்பிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற்றது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வரும் 20ம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில் திடீரென அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடப்பது அதிகரித்துள்ளன. அமெரிக்காவை பொறுத்தவரை பள்ளி, கல்லூரி, வணிக வளாகம், பூங்காக்கள் உள்பட பல்வேறு இடங்களில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. அமெரிக்காவின் லூசியானா மாகணம் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் கடந்த 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. இங்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மிகவும் பிரபலமான போர்பன் என்ற சாலையில் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் விதமாக மக்கள் கூடியிருந்தனர்.

மேலும் அருகே சூப்பர்டோம் என்ற இடத்தில் நடக்கும் கால்பந்து போட்டியை காணவும் ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர். அப்போது அதிவேகமாக காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் அங்கு குழுமியிருந்த மக்களை சுட்டு கொண்டே, மக்கள் மீது காரை வேகமாக மோதினார். பின்னர் அந்த நபர் காரை விட்டு இறங்கி அங்கிருந்த காவல்துறையினரையும் துப்பாக்கியால் சுட்டார். காவல்துறை பதிலுக்கு நடத்திய துப்பாக்கி சூட்டில் காரை ஓட்டி வந்த மர்ம நபர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்த எப்பிஐயின் முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் 42 வயதான ஷம்சுதின் ஜபார் என்பதும், இவர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 2009 முதல் 2010 வரை ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என தெரிய வந்துள்ளது.

இதேபோல் புத்தாண்டு தினத்தன்று நியூயார்க் குயின்ஸ் நகரின் ஜமைக்காவில் உள்ள அமாசுரா இரவு விடுதியில் ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது விடுதிக்கு வௌியே நின்றிருந்தவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவங்களின் தொடர்ச்சியாக டிரம்புக்கு சொந்தமான இடத்திலும் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஓட்டல் லாஸ் வேகாசில் உள்ளது.

இதன் முன்பு நேற்று டெஸ்லா சைபர் டிரக் தீ பிடித்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து எப்பிஐ கூறுகையில், ‘ஒரு டெஸ்லா சைபர்ட்ரக் ஓட்டலுக்கு முன்பு வந்து நிற்கிறது. பின்பு அந்த டிரக் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது’ என்று தெரிவித்தனர்.

ஆனால் டெஸ்லா கார் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், ‘டெஸ்லா சைபர்டிரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கும், வாகன தீவிபத்துக்கும் எந்தவித தொடர்பில்லை’ என்று கூறியுள்ளார். டெஸ்லா டிரக் வெடித்து சிதறியது தொடர்பாக சந்தேக அடிப்படையில் 37 வயதான அமெரிக்க ராணுவ வீரர் மாத்யூ லிவல்ஸ்பெர்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கொலராடோவில் இருந்து பிக்கப் டிரக்கை வாடகைக்கு எடுத்து வந்து, டிரம்ப் ஓட்டல் முன்பு நிறுத்திவிட்டு சென்று இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த டிரக்கில் பட்டாசுகள், சிலிண்டர்கள், வெடிபொருட்கள் ஆகியவை இருந்துள்ளது. மேலும் பேட்டரிகளுடன் இவை இணைக்கப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி எப்பிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

* ஐஎஸ் உத்தரவால் தாக்குதலா?
நியூ ஆர்லியன்சில் புத்தாண்டு கொண்டாட்டக்காரர்கள் மீது டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் வீரர் ஷம்சுத்-தின் ஜப்பார் ஓட்டி வந்த கார் மோதி 15 பேர் பலியானார்கள். அந்த காரில் இருந்து இஸ்லாமிய அரசு குழுவின் கருப்பு பேனரை மீட்டதாக எப்பிஐ தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளை தளமாகக் கொண்ட இந்த குழுவிலிருந்தோ அல்லது உலகெங்கிலும் உள்ள குறைந்தபட்சம் 19 இணைந்த குழுக்களிடமிருந்தோ காரை ஓட்டி வந்த முன்னாள் ராணுவ வீரர் ஷம்சுத்-தின் உத்தரவு பெற்றிருக்கலாம் என்று எப்பிஐ அதிகாரிகள் கருதுகிறார்கள். தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஐஎஸ் அமைப்பால் தான் ஈர்க்கப்பட்டதாக ஜப்பார் வீடியோ வெளியிட்டுள்ள தகவலை எப்பிஐ அமெரிக்க அதிபர் பைனுக்கு தெரிவித்துள்ளது.

* வீடு வெடித்து 3 பேர் பலி
அமெரிக்காவின் ஹொனலுலுவில் குடியிருப்பில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில் 3 பெண்கள் பலியாகினர். இந்த சம்பவத்தில் குடியிருப்பு முற்றிலுமாக வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் படுகாயமடைந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த வீட்டில் பட்டாசுகள் பெருமளவு குவித்து வைக்கப்பட்டு இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து எப்பிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* ஐஎஸ்் என்றால் என்ன?
அபு பக்கர் அல்-பாக்தாதியின் கீழ், ஐஎஸ் அமைப்பு 2014ல் ஈராக் மற்றும் சிரியாவில் பெரிய அளவு நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அங்கு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களைக் கொன்றனர். 2019ல், அமெரிக்கா படைகள் முற்றுகையால் வெடிகுண்டை வெடிக்கச்செய்து அல்-பாக்தாதி குடும்பத்தோடு பலியானார்.

அதன்பின் சிதறிய ஐஎஸ் குழு தற்போது மீண்டும் வலிமை பெற்று வருகிறது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஆயுதமேந்திய தீவிரவாத அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. அதே போல் ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்ட கொராசன் குழு தற்போது மிகவும் ஆபத்தான குழுவாகும். டிரம்ப் வெற்றி இந்த குழுவினரை பதற்றம் அடைய வைத்துள்ளது. அதனால் அமெரிக்காவை இலக்காக கொண்டு அமெரிக்கர்களை வைத்து அங்கு தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

* 2 தாக்குதல்களுக்கும் தொடர்பு உண்டா?
லாஸ் வேகாஸ் குண்டுவெடிப்புக்கும், நியூ ஆர்லியன்சில் 15 பேர் பலியான சம்பவத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று எப்பிஐ விசாரித்து வருகிறது. ஏனெனில் நியூ ஆர்லியன்ஸ் தாக்குதல் சம்பவத்தில் சிக்கிய சந்தேக நபரான 42 வயதான ஷம்சுத்தின்-ஜப்பார் என்பவர் 2009 முதல் 2010 வரை ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய அமெரிக்க ராணுவ வீரர் ஆவார். லாஸ்வேகாசில் சிக்கிய மாத்யூ லிவல்ஸ்பெர்கரும் முன்னாள் ராணுவ வீரர். இரண்டு இடத்திலும் நடந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் கார் வாடகை நிறுவனமான டூரோ மூலம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதுபற்றி எப்பிஐ விசாரித்து வருகிறது.

* அமெரிக்காவில் தாக்குதல் பிரதமர் மோடி கண்டனம்
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்ஸில் 15 பேரைக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,’நியூ ஆர்லியன்ஸில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த சோகத்திலிருந்து அவர்கள் குணமடையும் போது அவர்கள் வலிமையையும் ஆறுதலையும் பெறட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post 16 நாளில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் அமெரிக்காவில் அடுத்தடுத்து நடக்கும் தாக்குதலால் பீதி: தீவிரவாதிகள் கைவரிசையா? எப்பிஐ அதிரடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : United States ,Trump ,US ,FBI ,Washington ,US presidential election ,
× RELATED அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள...