புதுடெல்லி: சீனா ஹோடான் பிராந்தியத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை உருவாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களின் சில பகுதிகள் இந்திய யூனியன் பிரதேசமான லடாக்கில் வருகின்றன. இந்த பகுதிகள் நீண்டகாலமாக சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘‘சட்டவிரோதமாக சீனா செய்துள்ள ஆக்கிரமிப்பை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை. சீனாவின் ஹோடான் மாகாணத்தில் இரண்டு புதிய மாவட்டங்களை நிறுவுவது தொடர்பான அறிவிப்பை நாங்கள் பார்த்தோம். மாவட்டங்கள் என்று அழைக்கப்படுபவற்றின் அதிகார வரம்புகள் இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கில் அடங்கும். புதிய மாவட்டங்களை உருவாக்குவது அந்த பகுதியின் மீதான இந்தியாவின் இறையாண்மை தொடர்பான நீண்ட கால மற்றும் நிலையான நிலைப்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தாது. சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் கொடுக்காது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா நலனை பாதுகாப்போம்
திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் மெகா அணை கட்டும் திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. இந்த அணையாது அருணாசலப்பிரதேசம் மற்றும் அசாமில் மோசமானபாதிப்புக்களை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக முதல் முறையாக இந்திய அரசு பதில் அளித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீ்ர் ஜெய்ஷ்வால் கூறுகையில்,‘‘இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்கு நாங்கள் தொடர்ந்து கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். கரையோர மாநில நலன்களை பாதிக்கப்படாமல் இருப்பதை சீனா உறுதி செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
The post தனது ஆக்கிரமிப்பில் உள்ள லடாக் நிலப்பரப்பில் 2 புதிய மாவட்டங்களை உருவாக்கிய சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.