மேட்டுப்பாளையம்: தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பிய வாகனங்களால் மேட்டுப்பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக உள்ள மேட்டுப்பாளையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.
இந்த நிலையில் அரையாண்டு தேர்வு மற்றும் தொடர் விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததால் ஊட்டிக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் நேற்று ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக குன்னூர், கோத்தகிரி சாலைகளின் வழியாக தங்களது வாகனங்களில் வந்தனர். இதனால் மேட்டுப்பாளையம்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டும் நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதனால் அவ்வழித்தடத்தில் 2 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
The post விடுமுறை முடிந்து சொந்த ஊர் திரும்பிய வாகனங்கள்: மேட்டுப்பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.