சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் வீடு வீடாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் இடம்பெறுவார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன்கள் நாளை (3ம் தேதி) முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் வினியோகம் செய்ய டோக்கன் அச்சடிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. இப்போது அந்த பணிகள் முடிவடைந்து விட்டது.
இதைத்தொடர்ந்து, நாளை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் வழங்கும் டோக்கனில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். தினமும் காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் பொருள் வாங்கும் வகையில் டோக்கன் வினியோகம் செய்யப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகள் மூலம் வழங்குவது தொடர்பாக அரசாணைகளில் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பரிசு தொகுப்புகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பரிசு தொகுப்பு வினியோக அட்டவணை விவரத்தை காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து ரேஷன் கடைகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதில் எந்தவித புகாருக்கும் இடமின்றி பரிசு தொகுப்பை வினியோகம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
The post தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் நாளை முதல் வீடு வீடாக விநியோகம்: ரேஷன் கடை பணியாளர்கள் வழங்குவார்கள் appeared first on Dinakaran.