×

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர்

இரண்டாவது ஜோதிர்லிங்கத் தலம் மல்லிகார்ஜுனர் ஆலயம். ஆந்திராவில் கர்நூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் நகரில் நல்லமலா மலைகளின் அழகிய நிலப்பரப்பில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற வடநாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடியுள்ள தலம், திருப்பதம் எனப்படும். சக்திபீடங்களில் ஒன்று. ஆதிசங்கரர் சிவானந்த லஹரி இங்கு இயற்றியதாகக் கூறப்படுகிறது. அருகில் கிருஷ்ணாநதி ஓடுகிறது. இங்குள்ள பிரம்மராம்பிகை அம்பாள் சந்நதி 51 சக்திபீடங்களில் மற்றும் 18 மகாசக்தி பீடங்களில் தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாகவும் போற்றப்படுகிறது.

ஸ்ரீசைலம் பற்றிய குறிப்புகள்

ஸ்ரீசைலம் பற்றிய குறிப்புகள் மகாபாரதத்திலும், புராணங்களிலும் வருகிறது. கந்த புராணத்தில் ஸ்ரீசைல காண்டம் என்னும் அத்தியாயம், இக்கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. கைலாயம் முதலிடம் என்றால் நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. குரு ேக்ஷத்திரத்தில் லட்சக்கணக்கான தானம் செய்தாலும், கங்கையில் ஆயிரம் முறை நீராடினாலும், நர்மதா நதிக் கரையில் பல வருடங்கள் தவம் செய்தாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வசித்தாலும், என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்தப் புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது.

வீரசிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள்

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஒரு அம்பாள் பக்தர் ஆவார். அம்பிகையை வணங்கி அவரிடம் பெற்ற வாளைக் கொண்டு, அவர் எதிரிகளை அழித்து தன் தர்ம ராஜ்ஜியத்தை நிலைநாட்டினார். அதன் நினைவாக பிரம்மராம்பிகை அம்மன் கோயிலின் வடக்குப்புற கோபுரத்தை 1677ல் கட்டினார். எனவே இன்றளவும் அது சிவாஜி கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. வீரசிவாஜிக்கு பிரம்மராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது. இக்கோயிலானது 20 அடி உயரமும், 2121 அடி நீளமுடைய கோட்டைச் சுவர் போன்ற திருச்சுற்று மதில்களைக் கொண்டுள்ளது. இந்த மதிற்சுவரின் வெளிப்புறத்தில் நான்குபுறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர்க்காட்சிகள், பார்வதி திருமணம், அர்ச்சுனன் தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபிசக்கரவர்த்தி கதை, தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேஸ்வரர் விஸ்வரூபம், மகிஷாசுரமர்த்தினி போன்ற பல சிற்பங்களைக் கண்டுகளிக்கலாம்.

கிழக்குப்புறமுள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதால் அவர் பெயராலேயே கிருஷ்ணதேவராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. வடக்குப்புற கோபுரமானது சத்ரபதி சிவாஜியால், 1677ல் கட்டப்பட்டதால், சிவாஜி கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேற்குப்புற கோபுரமானது கோயில் நிர்வாகத்தால் 1966ல் கட்டப்பட்டு பிரம்மானந்தராயா கோபுரம் என பெயரிடப்பட்டது. இவற்றின் மையத்தில் மல்லிகார்சுனர் கருவறை உள்ளது. இதன்மீது உள்ள விமானமானது காக்கத்திய மன்னரான கணபதியின் சகோதரியான மைலம்மா தேவியால் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டின் வாயிலாக அறியப்படுகிறது. மல்லிகார்ஜூனர் சந்நதிக்கு மேற்கில் சந்திரமாம்பா சந்நதியும், கிழக்கே ராஜராேஜஸ்வரி சந்நதிகளும் உள்ளன. விநாயகர், சித்தி புத்தியரை மணந்த தலம். மல்லிகாபுரி எனப்படும் இந்த பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள் சந்திரலேகா இங்கு கிடைத்த மல்லிகைப் பூவாலும் அர்ஜுன மலர்களாலும் இறைவனை பூஜித்து வந்ததால் இறைவனுக்கு மல்லிகார்ஜுனர் என்ற திருநாமம்.

மூலவர்: மல்லிகார்ஜுனர்,
(ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)

நந்திதேவர் அவதரித்த தலம்

சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி தவமிருந்தார். சிவனின் அருளால் நந்தி பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தையைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள் நந்தி தேவர் மிகக் குறுகிய காலமே பூலோகத்தில் வாழ்வார், அவருக்கு ஆயுள் தோஷம் உண்டு என்று சொல்ல முனிவர் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி தேவர் ‘‘நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் சிவனைக் குறித்து தவம் இயற்றி மிகப்பெரிய தகுதியை அடைவேன்’’ என்று சொல்லி தவம் இயற்றினார்.அவர் தவத்தில் மகிழ்ந்த சிவன், அவருக்குச் சாகா வரத்தை அருளியதுடன் தனக்கு வாகனமாகவும் வரம் தந்தார். இனி அவருடைய அனுமதி இன்றி தன்னை யாரும் காண வர முடியாது என்ற உத்தரவும் பிறப்பித்தார் நந்தி தவம் செய்த மலை என்பதால் நந்தியால் என்ற இடம் மலையின் கீழே உள்ளது. தம்பி பர்வதனும் தவம் செய்து மலையாக மாறும் வரம் பெற்றான்.

முக்கியமான விழாக்கள்

தெலுங்கு வருடப்பிறப்பு, ஆவணி மாத சப்தமி பூஜை மகா, சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், பிரதோஷம். இந்த நாள்கள் விமர்சையாகக் கொண்டாடப்படும். கூட்டம் அலை மோதும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நேர்த்திக்கடனாக சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவிக்கிறார்கள்.

தாயார்: பிரம்மராம்பாள், பருப்பதநாயகி
தலவிருட்சம்: மருதமரம்
தீர்த்தம்: பாலாநதி

ஆலய வாசலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. மேற்கு பிராகாரத்தில் பாண்டவர்கள்கட்டியதாகச் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள் உள்ளன. சண்முகர் கோயில் உள்ளது. ராஜராஜேஸ்வரி கோயில் அன்னபூரணி ஆலயம் சகஸ்ரலிங்கேஸ்வரர் கோயில் பஞ்சநதீஸ்வரர் ஆலயம் போன்ற ஆலயங்கள் தரிசிக்கத்தக்கன. தெற்கு வாயில் கோபுரம் ரங்க மண்டபம் எனப்படும். சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவரின் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

திறந்திருக்கும் நேரம்

காலை 5 முதல் மதியம் மூன்று மணி வரையும், மாலை 5.30 முதல் இரவு 10 மணி வரையும் கோயில் திறந்திருக்கும். காலை நேரத்தில் மட்டும் சுவாமிக்கு நாமே பூஜை செய்யலாம். இதற்குத் தனியாக கட்டணம் உண்டு. திங்கள் வெள்ளியில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காது. ரிஷபம் ராசிக்காரர்கள், சிவராத்திரிக்கு இந்த ஜோதிர்லிங்க ஆலயத்திற்கு சென்று வணங்க வேண்டும்.

எப்படிச் செல்வது?

ஸ்ரீசைலத்திலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, மார்க்கபூர் ரயில் நிலையம். அங்கிருந்து பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள் உள்ளன. ஸ்ரீசைலம் செல்வதற்கு நல்ல சாலை வசதியும் உண்டு. ஹைதராபாத் – திருப்பதி மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களில் இருந்து அரசுப் பேருந்துகள் ஸ்ரீசைலத்திற்கு அடிக்கடி உண்டு. இக்கோயிலில் இருந்து அருகில் உள்ள நாகார்ஜுனர் அணைக்குச் செல்ல விசைப்படகு வசதி உள்ளது.

 

The post ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் appeared first on Dinakaran.

Tags : Srisilam ,Jothirlingat ,Mallikarjunar Temple ,Nallamala Hills ,Srisailam ,Kurnool district ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திராவில் முதல் முறையாக பிரகாசம் –...