×

மகர ராசிப் பணியாள் ஒரு திட்டப் பணியாளர்

மகர ராசியைச் சேர்ந்தவர்கள் கடமை வீரர்கள். தன் குடும்பத்துக்கும் தன் நிறுவனத்துக்கும் வேலை செய்வதற்கு என்றே பிறந்தவர்கள். 24 மணி நேரமும் தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மகர ராசிப் பணியாள் அலுவலகத்திற்குப் போகும்போது ஐந்து நிமிடம் முன்னாடியே சென்றுவிடுவார். அலுவலகம் முடிந்ததும் பத்து நிமிடம் கழித்துதான் தன் இருக்கையை விட்டு எழுந்து கிளம்புவார். இவர் எப்போதும் அலுவலகக் கேன்டீன் அல்லது வெளி ஹோட்டல்களில் சாப்பிடுவதை விரும்புவதில்லை. அங்கெல்லாம் உணவு சுத்தமாக சமைக்கப்பட்டு இருக்காது என்று காரணம் சொல்வார். அம்மா மீது அதிகப் பாசம் கொண்ட இவர்கள், அம்மாவின் சமையலை அவரது கை ருசியைதான் ரசித்து ருசித்து சாப்பிடுவார். எனவே தினமும் உணவை கட்டிக் கொண்டு வந்துவிடுவார். தாய்க்கு பின் தாரம் என்ற வகையில், மனைவியின் கைமணம் சமையல் திறன் ஆகியன இவர்களின் மனதுக்குப் பிடித்ததாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது ஆகும்.

மகர ராசிப் பணியாள்

மழைக்காலம் என்றால் குடையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார். வெயில் காலம் என்றால் தலையில் ஒரு தொப்பி போட்டுக் கொள்வதை விரும்புவார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருப்பார். தன் மனநலம், உடல்நலம் தொழில்நலம், நிறுவனத்தின் லாபம் ஆகியவற்றில் மிகவும் சிரத்தை எடுத்து ஒவ்வொன்றையும் நுணுக்கமாகக் கவனித்து நிறைவேற்றுவார்.

கடமை வீரர்

மகர ராசிப் பணியாள், தனது கடமையைக் கண்ணாகப் போற்றுவார். வேலை நேரங்களில் இவர் தன் வேலையை தவிர வேறு எதையும் வேடிக்கை பார்க்க மாட்டார். தன் வேலையை மிகவும் நுணுக்கமாகக் கவனித்துச் செய்வதில் கெட்டிக்காரர். ஏதோ முதலாளி தன் அருகிலேயே இருந்து ஆயிரம் கண்களால் தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பது போலவே இவர் மிகுந்த அச்சத்துடனும் அதிகபட்ச ஆர்வத்துடனும் வேலை செய்வார். சக பணியாளர்கள் ஏதேனும் பேசிச் சிரிக்கும் போதுகூட அந்த சிரிப்பு சத்தம் தனக்குத் தொந்தரவாக இருப்பதைப் போல கருதுவார்.

உணவு இடைவேளை

மகர ராசிப் பணியாளுக்கு, ஏதேனும் ஒரு ஓய்வு நேரத்தில் உற்சாகம் பொங்கும். அப்போது எல்லோரிடமும் கமெண்ட் அடித்து சத்தம் போட்டு சிரிப்பார். இவர் இவ்வளவு கலகலப்பாக இருக்கின்றாரே என்று அடுத்த நாள் அவரிடம் பேசப் போனால், போய் வேலையைப் பாரு என்று தன் வேலையைப் பார்த்துக் கொண்டே அந்த பணியாளரை விரட்டி விடுவார். ஓய்வு நேரத்தில் அவர் அருகில் சென்றாலும் தன் பாத்திரத்தில் இருக்கும் உணவை மட்டுமே பார்த்து சாப்பிடுவார். அருகில் வந்து உட்கார்ந்தவர்களை நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார்.

மனம் ஒரு குரங்கு

மகர ராசிப் பணியாள் ஒரு மூடி (moody) டைப். அந்த நேரத்தில் என்ன மனநிலையில் இருக்கின்றாரோ அதற்கு ஏற்ப நடந்து கொள்வார். இவரைப் பற்றி எவரும் முன் கணிப்பு வைத்துக் கொள்ள இயலாது. ஆனால், இவர் எல்லோரையும் எடை போட்டு தன் மனதிற்குள் ஒரு கணக்குப் போட்டு வைத்திருப்பார்.

திட்டமும் ஓட்டமும்

மகர ராசி பணியாள் மிக நுட்பமாக திட்டங்களைத் தீட்டுவார். விரைவில் அடுத்தடுத்த கட்டங்களை கடந்து உயர்ந்து உயர் பதவியை அடைந்து விடுவார். அதன் பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறுவார். அந்தப் பதவிக்கு மேல் தன்னால் போக இயலாது என்ற காலகட்டம் வந்ததும், அந்த உயர் பதவியே அவர் துச்சமாக மதிப்பார். தன்னுடைய பணிகளை ஒழுங்காகச் செய்ய மாட்டார். ஏனென்றால், அவருடைய அறிவும் மனதும் எப்போதும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று திட்டமிடும். இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற ஓர் உயர் பதவிக்கு வந்ததும், அவருக்கு வாழ்க்கையில் இருந்த சுவாரஸ்யம் போய்விடும்.

துன்பத்தில் இன்பம்

ஜாதகத்தில் மகர ராசி பணியாளுக்குப் பாவ கிரகங்களின் சேர்க்கை, பார்வை அல்லது அவர்களின் திசா புத்திகள் நடக்கும் காலத்தில் குரூரமானவராகவும், இரக்கமற்றவராகவும் நடந்து கொள்வார். முக்கியமான நேரங்களில், முரண்டு பிடிப்பது அத்தியாவசியமான வேலைகளில் ஆள் காணாமல் போய்விடுவது மற்ற பணியாளர்களைத் தவிக்க விடுவது, பின்பு எதுவுமே நடக்காதது போல அப்பாவியாக அங்கு வந்து கலந்து கொண்டு என்ன நடந்தது என்று கேட்பது போன்ற வேலைகளை கனகச்சிதமாகச் செய்வார். யார் மீதாவது இவருக்கு வருத்தமோ கோபமோ இருந்தால், அவரைத் தவிக்க விட்டுப் பார்ப்பதில் இவர் உள்ளூர மிகுந்த மகிழ்ச்சி அடைவார். அதனால், அவசர நேரங்களில் இவர் தன் சகப் பணியாளர்களுக்கு உதவாமல் காணாமல் போய்விடுவார்.

மகர ராசி பணியாளின் சந்தோஷ தருணம், ஆரவாரப் போக்கு அல்லது கொண்டாட்ட வெளிப்பாடு என்பது இவருடைய பதவி உயர்விலோ அல்லது இவருடைய குடும்பத்தில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்களிலோ இருக்காது. அவையெல்லாம் இயல்பாக நடப்பவை. அவை தாமாகவே நடக்கும் என்ற எண்ணம் இவருக்கு உண்டு. ஆனால், இவரை எதிர்த்துப் பேசியவன் அலட்சியமாக பேசியவன் இவர் போகும் பாதையில் முந்திக் கொண்டு சென்றவன் இவரிடம் சவால் விட்டவன் போன்றவர்களை எதிரியாகவே இவர் தன் மனதிற்குள் முடிவு செய்து வைத்திருப்பார். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் வந்தால் இவர் மனம் குதூகலம் அடையும். ஆனால், அந்த நபர் என்றைக்கோ நடந்த ஒரு விஷயத்தை அன்றைக்கே மறந்து போயிருப்பார். ஆனால் மகர ராசிக்காரர் எதையும் மறக்க மாட்டார். மகர ராசிக்காரர் யானையைப் போல நினைவாற்றல் உடையவர்கள். மனதில் வைத்திருந்து பழிவாங்கத் தயங்க மாட்டார்கள். பழிவாங்க முடியாவிட்டாலும் எதிரிகள் துன்பப்படும் போது இரக்கம் காட்ட மாட்டார்கள். ஆனந்தக் கூத்தாடுவார்கள். இவர்கள் இன்ட்ரோவர்ட் என்பதால் இவர்களுடைய முந்தைய கோபத்துக்கும் பிந்தைய மகிழ்ச்சிக்கும் இடையில் இருந்த துக்கம் யாருக்கும் தெரியாது. கூர்ந்து கவனிக்கக் கூடிய கன்னியா ராசி, கடக ராசிக்காரர்கள் இவர் கண்ணில் தெரியும். மின்னலை வைத்தே இவர் சக பணியாளின் துன்பத்தில் இவர் இன்பம் காண்கிறார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

புரியாத புதிர்

மகர ராசி பணியாள் ஒரு புரியாத புதிராகவே காணப்படுவார். தன் வேலைகளைச் சிறப்பாக செய்யும் இவர், தன் முதலாளிக்கு பெரிய விசுவாசியா என்றால் இல்லை. முதலாளியின் லாபத்தில் மிகுந்த அக்கறை உடையவரா? அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுகின்றவரா என்றால் நிச்சயமாகக் கிடையாது. மகர ராசிப் பணியாளுக்கு மற்ற பணியாளர்களுடன் சமமாக நின்று தங்கள் குடும்ப கஷ்டங்களை பேசுவதோ உடல் உபாதைகளுக்கு ஒருவருக்கொருவர் மருந்து சொல்லிக் கொள்வதோ அல்லது நிறுவனத்தைப் பற்றி நிறுவனத்தின் மற்ற பணியாள்களைப் பற்றி புறம் பேசுவதோ பிடிக்காது. இந்தக் காரணங்களால்தான் அவர் அலுவலகத்திற்கு வந்ததும் தன் வேலைக்குள் தன்னை புதைத்துக் கொள்கிறாரே தவிர, வேலையின் மீதான பிடிப்பு இல்லை.
(தொடரும்…)

The post மகர ராசிப் பணியாள் ஒரு திட்டப் பணியாளர் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED எலும்பு… அ முதல் ஃ வரை!