?ஹோமங்களில் காசு போடலாமா?
– சிவசங்கரி, மதுரை.
இந்த கேள்வியை பலரும் கேட்கிறார்கள். காரணம் பல இடங்களில் ஹோமங்கள் செய்யும் பொழுது அங்கு குழுமி இருக்கிற மக்களிடம் சில்லறை காசுகளை போடச் செய்து அதை பூர்ணாஹுதியோடு சேர்த்து அக்னியில் போடுகின்றார்கள். கடைசியில் அது கருப்பாகி, அந்த காசை பலரும் வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்துக் கொள்கின்றார்கள், இல்லாவிட்டால் பணம் வைக்கும் பீரோவில் வைத்துக் கொள்கிறார்கள். அடியேன் பல அறிஞர் பெருமக்களிடம் விசாரித்தவரை, இந்த விஷயத்தை ஆதரிக்கவில்லை. இப்படிப்பட்ட பழக்கம் இப்பொழுதுதான் வந்திருக்கிறது. பூர்ணாஹுதியில் என்னென்ன திரவியங்களைப் போடலாம் என்று அந்தந்த ஹோம வழிமுறை களில் சொல்லப்பட்டிருக்கின்றது. அதுவும் எந்தெந்த தேவதைகளைக் குறித்து ஹோமம் இயற்றப்படுகின்றதோ, அதற்கு தகுந்தால் போல ஹோம திரவியங்களை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். அதிலே பொன் (ஸ்வர்ணம்), பட்டு, வெள்ளி முதலியவற்றை சேர்க்கின்ற வழக்கம் உண்டு என்று சொல்கிறார்கள். காசு போடும் வழக்கம் இல்லை. இப்பொழுது உள்ள காசுகள் பொன் மற்றும் வெள்ளியினால் ஆனவை அல்ல. இவைகள் எல்லாம் இரும்பு சம்பந்தப்பட்டவை. எக்காரணத்தை முன்னிட்டும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அக்னியில் போடுவது முறை அல்ல. அந்த அடிப்படையில் இந்த பழக்கம் தேவையில்லாத பழக்கம் என்று ஆகம விதிகளை அறிந்த பெரியோர்கள் சொல்கின்றார்கள்.
நாம் பூர்ணாஹுதி செய்யும் பொழுது, மனதார இறைவனின் திருநாமத்தை மனதில் எண்ணி வாயால் உச்சரித்து வணங்கினால் போதும். ஹோமத்தின் பலன் நமக்கு முழுமையாக கிடைக்கும். ஹோம காசை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைத்ததால் மட்டுமே நமக்கு ஐஸ்வர்யங்கள் கிடைத்துவிடாது.
?வீடுகளுக்கு முன் பசுஞ்சாணம் கரைத்து ஏன் தெளிக்கிறோம்?
– கண்ணன், மதுரை.
இப்பொழுது யார் தெளிக்கிறார்கள்? அதுவும் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாசல் தெளித்து கோலம் போடுவது என்பது சிரமம். பெரும்பாலான வீடுகளில் வீட்டுக்கு உரியவர்கள் தூங்க, யாரோ வேலைக்கார அம்மா ஒரு வாளி தண்ணீரை கொட்டிவிட்டு போவதுதான் வாசல் தெளித்தல் என்று இருக்கிறது. யோசித்துப் பாருங்கள். வாசல் தெளித்து கோலம் போடுவதில் எத்தனை விஷயங்கள் இருக்கிறது?
1. காலையில் எழுவது.
2. குனிவதும் நிமிர்வதுமான பயிற்சி.
3. வாசல் தூய்மை.
4. கோலம் என்கிற கலை.
5. கோல மாவின் (அரிசி மாவு) மூலம் பல்லுயிர் ஓம்புதல்.
6. கூட்டி, கோலம் போட்ட வீட்டிற்கு முன் நிற்கும்போது வீட்டின் மங்கள கரமான தோற்றம்.
7. அந்த மங்களகரமான தோற்றத்தை பார்த்துக் கொண்டே செல்பவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி புத்துணர்ச்சி. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். வாசல் தெளித்து கோலம் போடுவதில் எவ்வளவு விஷயங்கள் அடங்கியுள்ளது. அதுவும் பசுஞ்சாணம் விசேஷமானது. கண்ணுக்குத் தெரியாத, நோயை உருவாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி பசுவின் சாணத்திற்கு உள்ளது. இப்போது பசுவை யார் வளர்க்கிறார்கள்? நல்ல விஷயங்களை நாகரீகப் போர்வையில் விட்டுவிட்டோம். அதில் இதுவும் ஒன்று.
?வீட்டில் அதிக அளவில் தண்ணீரைப் பயன்படுத்தினால் தரித்திரம் ஏற்படும் என்கிறார்களே, உண்மையா?
– வாசுதேவன், ரெய்ச்சூர்.
உண்மைதான். தண்ணீர் என்பது மஹாலட்சுமியின் அம்சம். தண்ணீரை ஆப: என்றும் அப்பு என்றும் குறிப்பிடுவார்கள். தெலுங்கு மொழியில் அப்பு என்ற வார்த்தைக்கு கடன் என்று பொருள். ஆக தண்ணீரை அளவுக்கதிகமாக செலவழித்தால், பொருட்செலவு என்பதும் அதிகமாகி, வீட்டில் தரித்திரம் என்பது தாண்டவமாடத் தொடங்கிவிடும். எக்காலத்திலும் தண்ணீரை வீணாக்கக் கூடாது. அப்படி தண்ணீரை வீணாக்குபவர்கள் இல்லத்தில் தரித்திரம் வந்து சேரும் என்ற கருத்து உண்மைதான்.
?ராசி கட்டத்திற்கு அருகிலேயே நவாம்ச கட்டம் என்ற ஒன்று இருக்கிறதே, அது எதற்கு?
– தினேஷ், சென்னை.
நவாம்ச கட்டம் மாத்திரமல்ல, ஜாதகத்தைக் கணிக்கும்போது ராசி, பாவம், நவாம்சம், திரேக்காணம், திரிம்சாம்சம், ஸப்தாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், ஷஷ்டி அம்சம், ஓரை என்று பலவிதமான கட்டங்கள் உண்டு. மிகவும் உள்ளார்ந்து பலன் பார்க்க இந்த கட்டங்கள் பயன்படுகின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான பலன்களைத் தரும். எல்லாவற்றையும் கணக்கிட்டு அதில் வரக்கூடிய விடையைக் கொண்டு ஜோதிடர் பலன் உரைப்பார். ஆனால், பொதுவாக ராசி மற்றும் நவாம்சத்தை மட்டும் குறிப்பிடுவது நம் வழக்கத்தில் உள்ளது. ராசியில் உள்ள கிரஹம் எந்த அம்சத்தில் உள்ளது, எந்த கிரஹத்தினுடைய சாரத்தினைப் பெற்றுள்ளது என்பதைப் பார்த்து அதற்கு ஏற்றாற்போல் பலன் உரைக்க பயன்படுகிறது. எல்லாம் இருந்தும் அனுபவிக்கும் அம்சம் இல்லை என்பார்கள் தெரியுமா, அதனை நமக்குத் துல்லியமாகச் சொல்வதுதான் இந்த நவாம்ச சக்கரம்.
?குபேர மூலை என்றால் என்ன? வீட்டில் அது எங்கே இருக்க வேண்டும்?
– கோபால்தாஸ், விழுப்புரம்.
வீட்டின் வடக்கு பாகத்தை குபேர மூலை என்று அழைப்பார்கள். எட்டு திசைகளில் வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என்பதால், அவரது பெயரில் அந்த திசையானது குபேர மூலை என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் வடக்கு திசையில் ஒரு அறை அமைந்திருந்தால், அந்த அறைக்குள் பணம் மற்றும் நகைகளை சேமித்து வைக்கும் அலமாரியை வைத்துக் கொள்வது நல்லது.
?வீட்டு வரவேற்பறைக்கு பச்சை நிற வண்ணம்தான் பூச வேண்டும் என்கிறார்களே?
– சொஸ்திகா, கொச்சின்.
பச்சை நிற வண்ணம் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரக்கூடியது. பச்சை நிறம் என்பது புதன் கிரஹத்திற்கு உரியது. சூழலுக்கு ஏற்ப செயல்படும் திறனை புதன் கிரஹம் நமக்குத் தரும். நம் வீட்டிற்குள் வரும் நபர் எந்த மனநிலையில் இருந்தாலும் அதனை செம்மைப் படுத்தும் தன்மை பச்சை நிறத்திற்கு உண்டு. அதனால்தான் வரவேற்பறைக்கு பச்சை நிறத்தை பரிந்துரைக்கிறார்கள். இந்தக் கருத்து ஏற்புடையதே.
?ஸ்ரீ ரங்கம் கோயில், சகல கிரக தோஷத்தையும் போக்கும் என்கிறார்களே உண்மையா?
– ஸ்ரீ தர், அரக்கோணம்.
நம்பிக்கையோடு போனால் எல்லாத் திருக்கோயில்களும் சகல தோஷங்களையும் போக்கும். அதிலும் ரங்கம் கட்டாயம் போக்கும். காரணம் அந்த கோயிலில் ஒவ்வொரு வாசலுக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அதில் ராஜா மகேந்திரன் திருச்சுற்றில் தெற்கு வாயிலில் உள்ள துவாரத்திற்கு “நாழி கேட்டான் வாசல்” என்று பெயர். இந்த வாசலிலும் ஆரியப் படாள் வாசலிலும் படிகளில் 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அரங்கனை நினைத்து பக்தியோடு பிரவேசிக்கும் போதே சகல தோஷங்களும் ஓடிவிடும். இதில் சந்தேகம் இல்லை.
The post ஹோமங்களில் காசு போடலாமா? appeared first on Dinakaran.