×

ராம நாமத்தால் ராமதூதனை வலம் வருவோம்!


ஸ்ரீ ராமரின் தீவிர பக்தன் அனுமன். அதோடு ராமாயணத்தின் முக்கிய நபர்களில் ஒருவராய் இருப்பவர் அனுமன்தான். ராவணனுக்கு எதிரான ராமனின் போரில் ஹனுமான் கலந்து கொண்டார். பல நூல்கள் அவரை சிவனின் அவதாரமாகவும் காட்டுகின்றன. அவர் அஞ்சனா மற்றும் கேசரியின் மகனாவார். அதேபோன்று 10ஆம் நூற்றாண்டில் ஹனுமான் சிவனின் அவதாரமாக கருதப்பட்டார். வேதங்களின் சிருஷ்டிகர்த்தாவான பிரம்மனை ஞான மூர்த்தியாகவும், சூரிய தேவனைத் தன் குருவாகவும் கொண்டு ஞானத்தின் உச்ச நிலையைத் தன் கடின உழைப்பாலும் அபார குரு பக்தியாலும் பெற்ற ஆஞ்சநேயர், வாயுகுமரன், வானரவீரன் என்றெல்லாம் அழைக்கப்படும் ஜயவீர ஆஞ்சநேயசுவாமி அருள்புரியும் அற்புத ஆலயங்கள் சிலவற்றைக் கண்டு தரிசிக்கலாம் வாருங்கள்!

கல்யாண ஆஞ்சநேயர்

சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது. இங்கிருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில் உள்ளது கல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். பத்ம பீடத்தில் நின்ற திருக்கோலம். இடதுகையை இடுப்பில் வைத்திருக்க, வலதுகையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார். ஜெயவீர ஆஞ்சநேயர். மூலவரான இவர், சதுர்புஜங்களுடன் சங்கு சக்கரமும் தாங்கி, சூரிய புத்திரியான சுவர்ச்சலா தேவியுடனும் காட்சி தருகிறார். இவரின் திருநாமம் கல்யாண ஆஞ்சநேயர்.

குடந்தை ராமசுவாமி

கையில் வீணையேந்திய அனுமனின் திருக்கோலத்தை, பிரசித்தி பெற்ற கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் தரிசிக்கலாம்.

பிரசன்ன வீரஆஞ்சநேயர் கோயில்

பெங்களூர் மகாலட்சுமி புரத்தில் 22 அடி உயர ‘பிரசன்ன வீர ஆஞ்சநேயர்’ கோயில் உள்ளது. சிறுகுன்றின் மீது ஆஞ்சநேயர் கிழக்கு நோக்கியுள்ளார். இவருக்கு நேர் எதிரில் கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. ஆஞ்சநேயரின் வலதுகையில் சஞ்சீவி மலையும், இடதுகையில் கதாயுதமும் கொண்டுள்ளார்.

அஞ்சனாதேவி ஆஞ்சநேயர்

மதுரை உசிலம்பட்டி சாலையில் ஆனையூர் உள்ளது. இந்த ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில், ஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனாதேவிக்குத் தனிச்சந்நதி உள்ளது. அஞ்சனா தேவியின் வலப்புறம் குழந்தை வடிவில் ஆஞ்சநேயரும், இடப்புறம் ஒரு பெண்ணும் காட்சியளிக்கின்றனர்.

சங்கிலி ஆஞ்சநேயர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ளது முடியனூர் கிராமம். இங்கே அனந்தவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ள ஆஞ்சநேயர், தம் கால்களை கல்லால் ஆன சங்கிலியால் கட்டிக்கொண்டிருக்கிறார். ராமாவதாரம் முடிந்து ராமர் வைகுண்டம் புறப்பட்டபோது அனுமனை அழைக்க, அனுமன் போக மறுத்துவிட்டு, பூமியிலேயே இருக்க விரும்பி தன்கால்களை சங்கிலியால் கட்டிக்கொண்டாராம்.

ஸ்ரீ ரங்க பக்த ஆஞ்சநேயர்

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான தளம் ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயில். கோயில் வெளிப்புறத்தில், ‘பக்த ஆஞ்சநேயர்’ நெடிய உருவத்துடன் விஸ்வரூபியாக காட்சி தருகிறார்.

பஞ்சமுக அனுமன்

சென்னையில் உள்ள ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் 12 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் கல் விக்கிரகமாக காட்சி தருகிறார். வாயு மூலையை அலங்கரிக்கிறார். இவரை வலம் வரும்போது கோஷ்டத்தில் பக்த ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர், வீரஆஞ்சநேயர் ஆகிய சுதையான வடிவங்கள் காட்சியளிக்கின்றன.

வீரசாந்த அனுமன்

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ளது கருமாரி திரிபுரசுந்தரி அம்பாள் திருக்கோயில். இங்கே பல மூர்த்திகளின் சந்நதிகள் உண்டு என்றாலும், இந்தக் கோயிலின் பிரதான நாயகன் அனுமன்தான்! சஞ்சீவி வீர சாந்த ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டிருக்கிறார். அனுமன் ஜெயந்தியன்று இவருக்கு 1,00,008 வடையால் பிரம்மாண்ட மாலை செய்து வழிபடுகிறார்கள்.

பாராயண அனுமன்

ஸ்ரீ முஷ்ணம் திருத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும் நிலையில் தனிச்சந்நதி கொண்டு காட்சி தருகிறார் அனுமன். அருகில், ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட கோலத்தில் உள்ளார்.

சிவசொரூப ஆஞ்சநேயர்

வேலூருக்கு அருகில் ராணிப்பேட்டை. இங்கிருந்து சுமார் 10,கி.மீ. தொலைவில் உள்ளது தெங்கால் என்ற ஊர். இங்குள்ள சிவாலயத்தில் நான்கு திருக்கரங்களுடன் மான், மழு ஏந்தியவாறு சிவசொரூபமாக காட்சி தருகிறார். இவரை ‘சிவசொரூப ஆஞ்சநேயர்’ என போற்றுகிறார்கள். இவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்திருக்கிறார். இப்படியொரு அனுமன் தோற்றம் வேறெங்கும் இல்லை.

பிரதாப ஆஞ்சநேயர்

தஞ்சாவூரின் மேல வீதியில் அமைந்துள்ளது ‘பிரதாப ஆஞ்சநேயர் கோயில்’. மராட்டிய மன்னன் பிரதாப சிம்மனால் கட்டப்பட்டது. இவர் வாயு மூலையில் கோயில் கொண்டிருப்பதால் ‘மூலை அனுமார்’ எனப்படுகிறார். இங்குள்ள ஆலயத்தூணில், யோக ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவரை வணங்கி விட்டுத்தான் மராட்டிய மன்னர்கள் போருக்குச் சென்றனராம்.

அழகு ஆஞ்சநேயர்

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது குடுமியான் மலை. இங்கு 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவாலயம் உள்ளது. இங்கு அழகான ஆஞ்சநேயர், தலையில் கிரீடம், முறுக்கு மீசை, வில் போன்று வளைந்த புருவங்கள், கழுத்தில் விநோதமான மாலை, காலைச்சுற்றியிருக்கும் வால் என்று நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த வீர அனுமன் சிற்பம் அரிதான ஒன்று!

ராமதூத அனுமன்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில் 8ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. இங்கு ராமதூத அனுமன் காட்சியளிக்கும் சிற்பம் உள்ளது. தூதனாக வந்த தனக்கு இருக்கை அளிக்காத ராவணன் எதிரில் தனது வாலையே சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்த நிலையில் அற்புத கோலத்தில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.

சாளக்கிராம ஆஞ்சநேயர்

தாமிரபரணி நதி வடக்கில் இருந்து தெற்காகப் பாயும் தட்சிண கங்கைக்கு அருகில் தெய்வச்செயல்புரம் என்னும் தலத்தில் அருமையாகக் குடிகொண்டு அருளாட்சி புரிந்து வருகிறார் ‘விஸ்வரூப சுந்தர வரத ஆஞ்சநேயர்’. சுமார் 5 அடி உயரத்தில் சாளக்கிராமத் திருமேனியராக விஸ்வரூபம் எடுத்து நின்றபடி அருட்பாலிக்கிறார். இதையடுத்து மூலவர் சந்நதிக்கு மேல் சுமார் 77 அடி உயரத்தில் மற்றொரு அனுமனும் காட்சி தருகிறார்.

அபயஹஸ்த கோல அனுமன்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மேற்கு வாசல் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2.கி.மீ. தொலைவில் உள்ளது ஒரு அனுமன் கோயில். வால் இல்லாமல் கூப்பிய கரங்களுடன் அருள்கிறார் மூலவர் அனுமன். அருகில் அத்தி மரத்தில் உருவாக்கப்பட்ட அனுமன், அபயஹஸ்த கோலத்தில் அருள்புரிகிறார். இந்த கோயிலுக்குப் பின்புறம் ஆஞ்சநேயர் தீர்த்தம் வளாகத்தில், கடல் மணலால் ஆன சுயம்பு அனுமனையும் தரிசிக்கலாம். ஒரே கோயில் மூன்று அனுமான்கள்.

மாம்பலம் ஆஞ்சநேயர்

சென்னை மேற்கு மாம்பலத்தில் வடதிருநள்ளாறு என்றழைக்கப்படும் கோயிலில் சனிபகவான் சந்நதியும், பஞ்சமுக அனுமான் சந்நதியும் அமைந்துள்ளது.

ஆம்பூர் ஆஞ்சநேயர்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சுமார் 11 அடியில் ஆஞ்சநேயர் தன் காலில் சனிபகவானை மிதித்த கோலத்தில் தெற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். இந்த திருக்கோயில் 1489ஆம் ஆண்டு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது.

அபூர்வ ஆஞ்சநேயர்

கும்பகோணம் ஆவூர் பாதையில் 8.கி.மீ. தொலைவில் உள்ளது பட்டீஸ்வரம் கோபிநாத பெருமாள் ஆலயம். இங்கே ஸ்ரீ மந் நாராயணனின் அனுக்கிரகத்தைப் பெற்ற ஆஞ்சநேயர் ‘இரட்டை ஆஞ்சநேயராக’ வீற்றிருக்கிறார். ஆயிரம் இதழ்கள் கொண்ட அபூர்வத்தாமரை மலரைத் தங்கள் உடலில் தாங்கியுள்ளார்கள்.

தாம்பரம் சானடோரியம் அனுமன்

தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ளது ராம ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தியன்று ‘அகண்ட பஜன்’ நடைபெறுவது சிறப்புக்குரியது. இதில் ஏராளமான கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. மற்றொரு சிறப்பு அனுமனை வேண்டி தேங்காய் கட்டுவது. கட்டிய 21ஆம் நாளில் அவர்களின் பிரார்த்தனைகள் பலிக்கின்றனவாம்.

ஜெயமங்கள ஆஞ்சநேயர்

கோவை மாட்டத்தில் உள்ள இடுகம்பாளையத்தில் மிகப்பழமையான பிரசித்தி பெற்ற ஜெயமங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில் அற்புதமாக அமைந்துள்ளது. இங்கு பிடியரிசி திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமை மிகவும் விசேஷம். எண்ணெற்ற பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

காவல் காக்கும் ஆஞ்சநேயர்

மந்திராலயத்துக்கு அருகில் உள்ளது பஞ்சமுகி திருக்கோயில். ராகவேந்திரர் தியானம் செய்து தரிசித்த ஆஞ்சநேயர் இங்கு குடிகொண்டுள்ளார். ஐந்து முகங்களுடன் அருள்புரிகிறார். இரவு நேரங்களில் கிராமத்தை வலம் வந்து, இவர் காப்பதாக ஐதீகம். அதனால் இவர் ‘காவல் காக்கும் ஆஞ்சநேயர்’ எனப்படுகிறார். அதனால் இவருக்கு பெரியபெரிய காலணிகள் செய்து வைக்கப்படுகின்றன.

கெட்வெல் ஆஞ்சநேயர்

நெல்லையில் கெட்வெல் மருத்துவமனை என்கிற தனியார் நிறுவனம் அழகிய ஆலயம் ஒன்றை அமைத்து விநாயகரையும், ஆஞ்சநேயரையும் பிரதிஷ்டை செய்துள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வலதுகரம் ஆசிவழங்கியும், இடதுகரம் கதாயுதம் ஏந்தியும் நின்ற திருக்கோலம் கொண்டு அருட்புரிகிறார். இவரை ‘கெட்வெல்’ ஆஞ்சநேயர் என்றே அழைக்கிறார்கள்.

தாராபுரம் ஆஞ்சநேயர்

தாராபுரம், காடு அனுமந்தராயர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை, வைகாசியில் இந்தத் திருக்கோயிலில் தேர்த்திருவிழா நடைபெறும். பத்து நாட்கள் உற்சவம் நடைபெறும். இதுபோன்று வேறு எங்கும் உற்சவமோ, தேரோட்டமோ நடைபெறுவதில்லை.

கருடஸ்தம்ப ஆஞ்சநேயர்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது. இங்கு ஆஞ்சநேயர் கருடஸ்தம்ப ஆஞ்சநேயராகத் தனிக்கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார். கருடஸ்தம்பத்தின் அடிப்பாகம் 16 அடி சுற்றளவும், உயரம் 60 அடியுமாக உள்ளது. ஒரே கல்லில் உருவானது.

மேலக்காவேரி ஆஞ்சநேயர்

கும்பகோணம் மேலக்காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள ஆலயத்தில் ஆஞ்சநேயசுவாமி, சனிபகவானை தன் காலடியில் போட்டு மிதித்தபடி அருள்புரிகிறார். இது ஒரு அபூர்வ தரிசனமாகக் கருதப்படுகிறது. மேலும், இவர் நின்ற நிலையில் கருங்கல்லால் ஆன திருவாசியுடன் காட்சிதருகிறார்.

சோளிங்கர் ஆஞ்சநேயர்

அரக்கோணத்திலிருந்து சுமார் 25.கி.மீ. தொலைவில் உள்ள சோளிங்கரில் சிறிய மலை மீது மேற்கு நோக்கி யோக நரசிம்மரைப் பார்த்த வண்ணம் யோக ஆஞ்சநேயர் அமர்ந்துள்ளார். இது மிகவும் அபூர்வமான சேவை. அழகிய பீடத்தின் மீது நான்கு கரங்களுடன் விளங்குகிறார். சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம், ஜபமாலையும் கொண்டு ஒரு கை விரல்களை மடக்கிய நிலையிலும் காட்சி தருகிறார். இந்த யோக ஆஞ்சநேயருக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடக்கிறது. ஆறுகால பூஜையும் உண்டு.

சுசீந்திரம் ஆஞ்சநேயர்

நாகர்கோவில் குமரி மார்க்கத்தில் சுசீந்திரம் என்ற புகழ் பெற்ற ஸ்தலம் உள்ளது. மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து `தாணுமாலயன்’ என்ற பெயரோடு எழுந்தருளியுள்ளார்கள். இங்கே அனுமன் கூப்பிய கரங்களுடன் சற்று ஒய்யாரமாக நெளிந்தபடியே 18 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் காட்சியளிக்கிறார். பழம் பெருமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதித்தருளும் இந்த அனுமனைப் பற்றிப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. இவருக்கு விஸ்வரூப ஆஞ்சநேயர் என்பது திருநாமம்.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர்

சென்னை நங்கநல்லூரில் கூப்பிய கரங்களுடன் 32 அடி உயரத்தில் விஸ்வரூபராக `ஆதிவியாதிஹர ஆஞ்சநேயர்’ நின்ற திருக்கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார்.வத்திராயிருப்பு

ஆஞ்சநேயர் கோயில்

சதுரகிரி யாத்திரைக்கு செல்லும் வழியில் உள்ளது வத்திராயிருப்பு ஆஞ்சநேயர் கோயில். இந்த ஆலயத்தை ஆற்றங்கரை ஆஞ்சநேயர் என்றும் கூறுவர். பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தந்து அருள் தருகிறார். ராம பக்தர்கள் அனுமனை வேண்டும் போது இந்த அனுமனின் கோயில்களுக்கும் சென்று வணங்குங்கள். அப்படி முடியவில்லை என்றாலும் அவனை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைப்பதற்குரிய அனைத்து பேறும்கிட்டும். கலியுகத்தில் சிவபெருமானின் மறு அவதாரமான அனுமன், கலியுகத்தின் வாழும் கடவுள் என்றும் நம்பப்படுகிறார். ஒரு பக்தனின் எந்த பிரச்னையாக இருந்தாலும், பகவான் அனுமன் அதை எந்த நேரத்திலும் தீர்த்து வைப்பார் என்றும்
கூறப்படுகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர்

சேலம் மாவட்டத்தில் நாமக்கல் மலைக்கோட்டையில் நின்ற திருக்கோலத்தில் 18 அடி உயரத்தில் திறந்த மண்டபத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். இது பழமையான ஆலயம். ஏணி மீது ஏறி நின்றுதான் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவரது தலைக்குமேல் வால் சுருண்டிருக்கிறது.

 

The post ராம நாமத்தால் ராமதூதனை வலம் வருவோம்! appeared first on Dinakaran.

Tags : Rama ,Sri Ramar ,Anuman ,Hanuman ,Ramon ,Ravanan ,Shiva ,Anjana ,Casari ,Ramadhuthana ,
× RELATED மாவட்டம் முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாட்டம்