×

பாதுகாப்பு பணியில் 800 போலீசார்

தர்மபுரி, ஜன.1: தர்மபுரி மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 800 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஆங்கில புத்தாண்டு பிறந்ததையொட்டி, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. புத்தாண்டு பிறந்ததும், மக்கள் ஒருவருக்கு ஒருவர் கைகளை குலுக்கி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டு அமைதியாக கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. புத்தாண்டையொட்டி மாவட்டம் முழுவதும் எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 9 டிஎஸ்பிக்கள், 22 போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று நள்ளிரவு ஈடுபட்டிருந்தனர்.

மேலும் தொப்பூர், காரிமங்கலம், நரிப்பள்ளி, மஞ்சவாடி கணவாயில், காடுசெட்டிப்பட்டி, திப்பம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து, தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். முக்கிய சாலை சந்திப்புகள், வளைவுகளில் போலீசார் தீவிர வாகன சோதனை செய்தனர். மேலும் நெடுஞ்சாலை 5 ரோந்து வாகனங்கள், 10 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 55 டூவீலர் ரோந்து வாகனங்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

டூவீலரில் 2க்கும் மேற்பட்ட நபர்கள் சென்ற டூவீலர்களை போலீசார் நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். போக்குவரத்தை சீர்செய்ய போக்குவரத்து காவல் குழுவும், குற்ற நடவடிக்கைகளை தடுக்க சாதாரண உடையில் குற்றப்பிரிவு தனிப்படையும், சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வண்ணம் சிசிடிவி கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. தர்மபுரியில் 4 ரோடு, ராமக்காள் ஏரி, மதிகோன்பாளையம் ரவுண்டானா, தர்மபுரி அரசு கலைக்கல்லூரி, வத்தல்மலை பிரிவு சாலை, பென்னாகரம் ரோடு, மேம்பாலம் ஆகிய இடங்களில் நேற்று இரவு வாகன தணிக்கை செய்யப்பட்டது. நேற்று இரவு தர்மபுரி நான்கு ரோட்டில் காவல்துறை சார்பில் கேக்வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி, விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், முக்கிய சாலைகள், சாலை சந்திப்புகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதையில் வாகனங்கள் ஓட்டிச்சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பொதுமக்களை அதிர்ச்சியடையவைக்கும் வகையில் திடீரென சத்தம் எழுப்பி தொந்தரவு செய்யக்கூடாது’ என்றனர்.

The post பாதுகாப்பு பணியில் 800 போலீசார் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri district ,English New Year ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்