சிட்னி: 2024 ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம், அணியின் கேப்டனாக இந்திய நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இடம் கொடுத்து கவுரவித்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டில் சிறப்பாக ஆடிய கிரிக்கெட் வீரர்களை கொண்டு சிறந்த டெஸ்ட் அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இந்த அணியில் இரு இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். அணிக்கு கேப்டனாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேர்வு செய்து கவுரவித்துள்ளது ஆஸி வாரியம். இந்த அணியில் இடம்பெற்றுள்ள மற்றொரு இந்திய வீரராக அதிரடி ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் திகழ்கிறார்.
தவிர, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோஷ் ஹேசல்வுட், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, இங்கிலாந்து வீரர்கள் பென் டக்கெட், ஜோ ரூட், ஹேரி புரூக், இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ், தென் ஆப்ரிக்காவின் கேஷவ் மஹராஜ், நியுசிலாந்தின் மேட் ஹென்றி, ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
அசத்தல் நாயகர்கள்
2024ம் ஆண்டு முழுவதும் இந்தியாவின் இளம் புயல் ஜெய்ஸ்வால் (22) அனுபவ வீரரை போன்று சிறப்பாக ஆடி அசத்தினார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடந்த டெஸ்டில் அவர் அடித்த 161 ரன்கள் வெற்றிக்கு வலுவான அடித்தளம் போட்டது. இந்தியாவில், கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்து அணிக்கெதிராக நடந்த போட்டிகளில் அடுத்தடுத்து சதம் விளாசி அனைவரின் பாராட்டுகளை அவர் பெற்றார். ஒரு ஆண்டில் அதிகபட்சமாக 36 சிக்சர்கள், அதிக ரன் குவித்த இந்திய வீரர் போன்ற பல சாதனைகளை அவர் நிகழ்த்தினார். சிறப்பு அணியில் இடம்பெற்றுள்ள பும்ரா, 2024ல் 13 டெஸ்ட்களில் ஆடி 71 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் தந்த ரன் சராசரி, 14.92.
The post டீம் ஆப் தி இயர் 2024 கேப்டனாக பும்ரா தேர்வு: ஆஸி கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.