×

சிட்னியில் துவங்கியது 5வது டெஸ்ட்; ஆஸி வேகத்தில்… இந்தியா சோகத்தில்..! ரோகித்துக்கு கட்டாய ஓய்வு

சிட்னி: ஆஸ்திரேலியாவுடனான 5வது டெஸ்டின் முதல் நாளில் இந்தியா மோசமாக ஆடி எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் நேற்று சிட்னியில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. எதிர்பார்த்ததை போலவே கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கட்டாய ஓய்வு தரப்பட்டு, பும்ரா தலைமையில் இந்தியா களமிறங்கியது. ரோகித்துக்கு பதில் சுப்மன் கில் களம் கண்டார். காயமடைந்த ஆகாஷ் தீப்புக்கு மாற்றாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றார். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணியில் மிட்செல் மார்ஷுக்கு பதில் பியூ வெப்ஸ்டர் அறிமுக வீராக களமிறங்கினார்.

இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 10, கே.எல்.ராகுல் 4 ரன்னில் அவுட்டாகி வழக்கம் போல் மோசமான துவக்கத்தை தந்தனர். ரிஷப் பண்ட் (40 ரன்) தவிர மற்ற வீரர்கள் ஆஸி வீரர்களின் அனல் பறக்கும் வேகப்பந்துகளை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினர். கடந்த போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வரும் நட்சத்திர வீரர் கோஹ்லியும் 17 ரன்னில் பொலாண்ட் பந்தில் வெப்ஸ்டரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். இதனால், 72.2 ஓவரில் 185 ரன்னில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. சிராஜ் 3 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

ஆஸி வீரர்களில் பொலாண்ட் 4, ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2, லயன் ஒரு விக்கெட் எடுத்தனர். அதனையடுத்து ஆஸி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. பும்ரா வீசிய 3வது ஓவரின் கடைசி பந்தில் கவாஜா 2 ரன் எடுத்திருந்தபோது ராகுலிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அப்போது ஆஸி. ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்திருந்தது. சாம் கோன்ஸ்டாஸ் 7 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதனால், இந்தியா 176 ரன் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸி 2ம் நாளான இன்று முதல் இன்னிங்சை தொடர உள்ளது.

கோஹ்லியை மிரட்டும் பொலாண்ட்
* இந்திய கேப்டன்கள் வரிசையில் சரியாக ஆடவில்லை என்ற காரணத்துக்காக ஓய்வு தரப்பட்ட முதல் கேப்டன் ரோகித் சர்மா
* கில்லுக்கு எதிராக கடந்த 9 இன்னிங்சில் 189 பந்துகளை வீசிய லயன் 73 ரன்னை விட்டுக் கொடுத்து 4 முறை ஆட்டமிழக்க செய்துள்ளார்.
* கோஹ்லிக்கு எதிரான 6 இன்னிங்ஸ்களில் 98 பந்துகள் மூலம் 32 ரன் மட்டுமே தந்த ஸ்காட் பொலாண்ட் 4 முறை அவரது விக்கெட்டை தட்டி தூக்கியுள்ளார்.
* பும்ரா கடைசியாக விளையாடிய 8 இன்னிங்சில் கவாஜாவுக்கு 112பந்துகள் வீசி 33 ரன் தந்துள்ளார். அவற்றில் 6 முறை கவாஜா விக்கெட்டை பும்ரா கைப்பற்றி இருக்கிறார்.

The post சிட்னியில் துவங்கியது 5வது டெஸ்ட்; ஆஸி வேகத்தில்… இந்தியா சோகத்தில்..! ரோகித்துக்கு கட்டாய ஓய்வு appeared first on Dinakaran.

Tags : Sydney ,India ,Rohit ,Australia ,Dinakaran ,
× RELATED இன்று 5வது ஆட்டம் ஆரம்பம் கம்பீருக்கு...