ஐஎஸ்எல் கோப்பை கால்பந்து சென்னையின் எப்சி அணி பெங்களூருவிடம் தோல்வி

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கோப்பைக்காக சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்பந்தாட்ட போட்டியில் சென்னையின் எப்சி அணியை பெங்களூரு எப்சி அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியது. நாட்டின் பல்வேறு நகரங்களில் ஐஎஸ்எல் கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டிகளில் 13 அணிகள் மோதி வருகின்றன. சென்னை ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் தலா 2 கோல் அடித்து இருந்தன. சென்னைக்காக இர்பான் யத்வாட், லால்ரின்லியானா ஹாம்டே தலா ஒரு கோல் அடித்தனர். பெங்களூருவின் ரையான் வில்லியம்ஸ், சுனில் சேத்ரி தலா ஒரு கோல் அடித்தனர். இருப்பினும், ஆட்டத்தின் பிற்பாதியில் பெங்களூரு அணியின் கை ஓங்கியது. பெங்களூரு வீரர் ரையான் வில்லியம்ஸ், 68வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.

ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் சென்னையின் லால்டின்லியானா ரெந்த்லே தவறுதலாக அடித்த பந்து சென்னையின் கோல் போஸ்டுக்குள் சென்றதால் பெங்களூரு அணிக்கு 4வது கோல் கிடைத்தது. இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி, சென்னையை வென்றது. 14 போட்டிகளில் ஆடியுள்ள சென்னைக்கு, இது 7வது தோல்வி. இதையடுத்து, புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் சென்னை உள்ளது. பெங்களூரு அணி 2வது இடத்தில் நீடிக்கிறது.

The post ஐஎஸ்எல் கோப்பை கால்பந்து சென்னையின் எப்சி அணி பெங்களூருவிடம் தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: