* விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 5 வாலிபர்கள் பலி: பைக் ரேசில் ஈடுபட்ட 242 வாகனங்கள் பறிமுதல்
சென்னை: சென்னை மெரினா, பெசன்ட் நகரில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடி 2025 புத்தாண்டையொட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் நேற்று விடிய விடிய வரிசையில் நின்று வழிபட்டனர். சர்ச்களில் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடந்தன. கிழக்கு கடற்கரை சாலை என 4 இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 5 வாலிபர்கள் உயிரிழந்தனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசாரின் தடையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் ஆங்கில நேற்று புத்தாண்டு பிறந்ததையொட்டி பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கேக் வெட்டி வெகு விமர்ச்சையாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை பெருநகர காவல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இயைதடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 19 ஆயிரம் போலீசார் மற்றும் 1500 ஊர்காவல்படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மெரினா, பெசன்ட் நகர் பகுதியில் பொதுமக்கள், நண்பர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கேக்குகள் வெட்டி நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ‘ஹாப்பி நியூ இயர்’ என்று விண்ணை முட்டும் வகையில் கோஷம் எழுப்பி புதிய புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு பொதுமக்கள் அதிகமாக கூடினர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிக அளவில் திறண்டனர். நள்ளிரவில் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததால் சாலைகளில் புத்தாண்டை பொதுமக்கள் கொண்டாடினர். அதேபோல், சென்னையில் சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா தேவாலயம் என 100க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. சர்ச்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வழிபாட்டிற்கு வந்த பொதுமக்கள் எந்த சிரமங்கள் இன்றி வந்து செல்லும் வகையில் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.
பிறகு பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களின் பெற்றோர்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து போலீசார் எழுதி வாங்கி கொண்டு வாகனங்களை திரும்ப ஒப்படைத்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் நடந்த பகுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘டிரோன்’ கேமரா மூலமும், பெண்கள் துணை கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்ட பெண் காவலர்கள் கொண்ட குழுவினரும் சிறப்பாக செயல்பட்டதால், பெண்களுக்கு எந்த தொந்தரவுகளும் இன்றி இனிமையான புத்தாண்டாக இந்த 2025ம் ஆண்டு பிறந்துள்ளது.
அதே நேரம் புதிய ஆண்டை கொண்டாடி விட்டு வீட்டிற்கு செல்லும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் சேத்துப்பட்டு, சோழவரம் பகுதியில் நடந்த சாலை விபத்துக்களில் அடுத்தடுத்து 5 வாலிபர்கள் உயிரிழந்தனர். 2 பேர் ஆபத்தான நிலையல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னை வடபழனியை சேர்ந்தவர் சாருகேஷ்(19). இவர் பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்தார்.
இவர் தனது நண்பரும் கல்லூரி மாணவருமான சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சஞ்சய் (19) என்பவருடன் ஆங்கில புத்தாண்டை கொண்டாடிவிட்டு, நேற்று அதிகாலை சென்னைக்கு திரும்பினர். இசிஆர் சாலையில் உள்ள வெட்டுவாங்கேணி பகுதியில் வரும்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெயினர் லாரியின் மீது அவர்களது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாருகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சஞ்சய் படுகாயமடைந்தார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், நேற்று அதிகாலை புத்தாண்டு கொண்டாடிவிட்டு பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் ஓஎம்ஆர் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் தூக்கி வீசப்பட்டு சடலமாக கிடந்தார். இறந்த நபருக்கு 35 வயது இருக்கும், அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இதுகுறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசாருக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த நிதீஷ்(18) என்ற வாலிபர் புத்தாண்டு கொண்டாடி விட்டு தனது வீட்டிற்கு திரும்பிய போது பெரும்பாக்கம் பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் மின்னல் வேகத்தில் பைக்குள் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர சென்னை சேத்துப்பட்டு கெங்குரெட்டி சுரங்க பாதையில் பைக்கில் மின்னல் வேகத்தில் முன்னால் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற போது பைக் கட்டுப்பாட்டை இழந்த கெங்கு ரெட்டி சுரங்கப்பதையின் தூணில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நேபாளம் நாட்டை சேர்ந்த தீபக் என்பவர் சம்பவ இடத்திலேயே தலையில் காயமடைந்து உயிரிழந்தார். மற்றொரு நபரான பாபு படுகாயமடைந்தார். காயமடைந்த பாபுவை அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிபாளையம் அரசமரக் கோயில் தெருவை சேர்ந்தவர் சாய்குமார் (26). செங்குன்றம் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாடிவிட்டு, இரவு மது அருந்திவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, புதிய எருமை வெட்டிபாளையம் சாலையில் சென்றபோது, நிலை தடுமாறி அருகிலிருந்த கல்லில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சாய்குமார், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார். சென்னை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதியில் 2025ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது உற்சாக மிகுதியில் அதிவேமாக சென்ற போது ஏற்பட்ட விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
The post மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டம்: கோயில்கள், சர்ச்சுகளில் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு appeared first on Dinakaran.