சிகிச்சை குறித்து தகவல் தெரிவிக்காத அரசு மருத்துவமனை முன் மக்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம்


செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை கட்டி சிகிச்சை பலனின்றி ஒரு பெண் பரிதாபமாக பலியானார். இதுபற்றிய சிகிச்சை குறித்து சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் உரிய தகவல் தெரிவிக்காததை கண்டித்து, நேற்றிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அருகே ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் பாதிரி. இவரது மனைவி செல்வி (46). இவர், கடந்த சில மாதங்களாக கர்ப்பப்பை கட்டியால் அவதிப்பட்டு வந்துள்ளார். செங்கல்பட்டு அருகே படாளம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனைவி செல்வியை கடந்த சில நாட்களுக்கு முன் சண்முகம் பாதிரி சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்.

மறுநாள் செல்விக்கு கர்ப்பப்பை கட்டி அறுவை சிகிச்சை நடந்துள்ளது. பின்னர், நேற்று காலை மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தனியார் மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. எனினும், செல்விக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, என்ன பிரச்னை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எதற்காக மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் என்பது போன்ற தகவல்களை கணவர் மற்றும் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுபற்றிய தகவலும் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவிக்காமல் மூடி மறைத்துள்ளனர்.

இந்நிலையில், செல்விக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிலவரம் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தகவல் தெரிவிக்காததை கண்டித்து, நேற்று நள்ளிரவு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவுவாயிலின் முன்பு செல்வியின் உறவினர்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென வாகனங்களை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செல்வியின் சிகிச்சை நிலவரம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய தகவல் தெரிவிக்காமல் மூடி மறைத்து, அநியாயமாக சாகடித்துவிட்டனர் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு நகர போலீசார் விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செல்விக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து உரிய தகவல் தெரிவிக்காத நபர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.

The post சிகிச்சை குறித்து தகவல் தெரிவிக்காத அரசு மருத்துவமனை முன் மக்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: