விவசாயி அரை நிர்வாண போராட்டம்


வேலூர்: வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு இன்று காலை 9.30 மணியளவில் விவசாயி ஒருவர், அரை நிர்வாணத்துடன் காதில் பூ வைத்து கொண்டு கையில் சில்வர் பாத்திரத்தில் மண்ணை நிரப்பி அதில் நெற்பயிர்களை நட்டு வைத்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். அவர், வேலூர் தாலுகா சோழவரம் பாப்பான்தோப்பு பகுதியை சேர்ந்த தமிழக விவசாயிகள் சங்க கணியம்பாடி ஒன்றிய தலைவர் ஜெய்சாமி என்பது தெரிவந்தது.

இதுகுறித்து அவர் போலீசாரிடம் கூறுகையில், ‘கணியம்பாடி ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் மண்ணை எடுத்து பாப்பான்தோப்பு கிராமத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சிலர் வீட்டு மனைகளை அமைக்கிறார்கள். முறைகேடாக லாரி, லாரியாக எடுத்து பதுக்குகிறார்கள். அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார். இதையடுத்து போலீசார் சமரசம் செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று, கலெக்டர், தாலுகா அலுவலகத்தில் புகார் மனுவாக கொடுங்கள். நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

The post விவசாயி அரை நிர்வாண போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: