×

நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டுவதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை: பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து அதிகரித்து, முழு கொள்ளளவை எட்டுவதால், விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதனால், கொசஸ்தலையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கம், 34.58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 32.31 மில்லியன் கன அடி.

தற்போது ஏரியின் நீர் இருப்பு 31.21 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 1290 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், நேற்று முன்தினம் முதல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதாலும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், ஏரியின் முழு கொள்ளளவான 35 அடியை தொட்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று காலை 9 மணி முதல் வினாடிக்கு 1,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் உள்ளிட்ட கொசஸ்தலையாற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

* புழல் ஏரி நீர் இருப்பு 3 டிஎம்சியாக உயர்வு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில், வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்ததால், பாதுகாப்பு கருதி கடந்த 13ம் தேதி ஏரியிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு, கனமழை எச்சரிக்கை ஓய்ந்ததும் கடந்த 18ம்தேதி உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை, சோழவரம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து அனுப்பப்பட்டு வரும் தண்ணீர் காரணமாக புழல் ஏரியின் நீர் இருப்பு 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 3 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3030 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 20.09 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு 740 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 91.82% கொள்ளளவுடன் 3 டிஎம்சி தண்ணீர் நிரம்பி உள்ளதால், புழல் ஏரி கடல்போல காட்சியளிக்கிறது.

இதேபோல, 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 186 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லை. இந்த, சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்டு வந்த நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 18.86 அடி உயரத்தில் தற்போது 4.70 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து, ஏரிகளை கண்காணித்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டுவதால் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 1000 கன அடி உபரிநீர் திறப்பு: கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Poondi reservoir ,Chennai ,Kosasthalaiyar ,Poondi ,Chennai… ,Dinakaran ,
× RELATED பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து 1000...