அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வரையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை நிறுத்தி வைக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் வாதம்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அதனை விசாரித்த நீதிமன்றம், ‘‘அதுதொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக எட்டு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் ஆணை பிறப்பித்திருந்தது. இதைத்தொடர்ந்து இதே விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த வாரம் ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. அதில், ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனுதாரர் சூர்யமூர்த்தி ஆகியோர் டிசம்பர் 23ம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட தலைமை தேர்தல் ஆணையத்தின் முந்தைய உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி.சண்முகம் மற்றும் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆகியோரும், அதேப்போன்று ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி, மனுதாரர் சூர்யமூர்த்தி ஆகியோர் நேற்று டெல்லி தலைமை தேர்தல் ஆணைத்தில் நேரில் ஆஜராகி அவரவர்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

இதையடுத்து அனைவரும் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான சி.வி.சண்முகம் கூறியதில், ‘‘மனுதாரர் சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அவர் தனியாக ஒரு கட்சியை ஆரம்பித்து அதிமுகவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டவர். எனவே அவரது கோரிக்கை மனு விசாரணைக்கு தகுதியானது கிடையாது என்பதால், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஆணையத்தில் தெரிவித்துள்ளோம் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜலட்சுமி கூறியதில், ‘‘அதிமுகவை பொருத்தமட்டில் ஓ.பன்னீர்செல்வம் அடிப்படை உறுப்பினரால் தேர்வு செய்யப்பட்டவர். அவர் தான் அதிமுக கட்சியை வழிநடத்தி வருகிறார். எனவே அவருக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதேப்போன்று மனுதாரர் சூர்யமூர்த்தி கூறியதில்,\\” கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது ஆகிய அனைத்தும் அதிமுக சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். எனவே அவை அனைத்தையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் என்பவர் தேர்வு செய்யப்பட வேண்டும். அதுவரையில் எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் சூர்யமூர்த்தியின் மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். இதைத்தொடர்ந்து அதற்கு மனுதாரர் சூர்யமூர்த்தி ஜனவரி 13ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

The post அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வரையில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை நிறுத்தி வைக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் வாதம் appeared first on Dinakaran.

Related Stories: