திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் சபரிமலையில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் நேற்றிரவு பக்தர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தப்பட்டனர். சபரிமலையில் 41 நாள் நீண்ட மண்டல காலம் நாளை மறுநாள் நடைபெறும் மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி நாளை மாலை 6 மணியளவில் சன்னிதானத்தை அடைகிறது. பின்னர் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். நாளை மறுநாள் (26ம் தேதி) பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றுடன் இந்த வருட மண்டல காலம் நிறைவடைகிறது.
மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கடந்த சில நாளாக சபரிமலையில் பக்தர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருகின்றனர். கடந்த 19ம் தேதி முதல் தினமும் 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 96,579 பேர் தரிசனம் செய்தனர். இதுவரை கடந்த 40 நாளில் 32 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் சன்னிதானத்தில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நேற்று இரவு நிலக்கல்லில் சிறிது நேரம் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சன்னிதானத்தில் கூட்டம் குறைந்த பின்னரே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று மாலை 4 மணிக்கு வந்த பக்தர்களால் இரவு 10 மணிக்கு பின்னரே தரிசனம் செய்ய முடிந்தது. 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட பின்னரும் பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் நேற்று இரவு பக்தர்கள் வரிசை மரக்கூட்டத்தையும் தாண்டி சரங்குத்தி வரை காணப்பட்டது. இன்று அதிகாலை நடை திறந்தபோதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நெரிசலை குறைப்பதற்காக நாளை ஆன்லைன் மூலம் 50 ஆயிரம் பேருக்கும், நாளை மறுநாள் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இந்த இரு நாட்களிலும் உடனடி முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
வீடு தேடி வரும் பிரசாதம்
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை பக்தர்களின் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கும் வசதியை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது. ஒரு பார்சலின் விலை ரூ.520. இதில் ஒரு பாக்கெட் அரவணை பாயாசம், நெய், மஞ்சள், குங்குமம், விபூதி மற்றும் அர்ச்சனை பிரசாதம் ஆகிய பொருட்கள் அடங்கும். 4 பாக்கெட் அரவணை பாயாசம் அடங்கிய பார்சல் ரூ.960க்கும், 10 பாக்கெட் அரவணை பாயாசம் அடங்கிய பார்சல் ரூ.1760க்கும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களை அணுகி அதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இக்கட்டணத்தை செலுத்தினால் தபால்காரர் மூலம் ஐயப்பனின் அருட்பிரசாதம் உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கப்படும்.
The post சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்; நிலக்கல்லில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்: நேற்று ஒரே நாளில் 96,579 பேர் தரிசனம் appeared first on Dinakaran.