மத வழிபாட்டுத் தலங்களை குறிவைப்பதால் பதற்றம்; ஆர்எஸ்எஸ் – சாமியார்கள் அமைப்பு இடையே மோதல்: அயோத்தி ராமர் கோயில் குறித்து கூறிய கருத்தால் சர்ச்சை

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர் கூறிய கருத்துக்கு சாமியார்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத வழிபாட்டுத் தலங்களை குறிவைப்பதால் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், ‘சுவாமி ராமகிருஷ்ணன் மிஷனில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. நாம் இந்துக்கள் என்பதால் இதை நாம்மால் மட்டுமே செய்ய முடியும். ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு, புதிய புதிய இடங்களில் அதேபோன்ற பிரச்னைகளைக் கிளப்புகின்றனர். அதன் மூலம் இந்துக்களின் தலைவர்களாக மாறலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது, அது அனைத்து இந்துக்களின் நம்பிக்கைக்குரிய விஷயம் என்பதால், அதில் அரசியல் உள்நோக்கங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

ஆனால், ஒவ்வொரு நாளும் அதேப் போன்ற ஒரு புதிய விவகாரம் சர்ச்சையாக்கப்படுகிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? எனவே, இந்தியர்களாகிய நாம் முந்தைய தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நம் நாட்டை உலகிற்கு முன்மாதிரியாக மாற்றுவதற்கு உழைக்க வேண்டும். சில குழுக்கள் பழைய ஆட்சி முறையை மீட்டெடுக்க முயன்றுவருகிறார்கள். ஆனால் இப்போது நாடு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்குகிறது. இந்த நாட்டின் பாரம்பரியம் என்னவென்றால், அனைவரும் அவரவர் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றலாம். விதிகள் மற்றும் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே ஒரே தேவை’ என்றார். இவரது கருத்துக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதுகுறித்து துறவிகள் மற்றும் முனிவர்களின் அமைப்பான அகில் பாரதிய சந்த் சமிதி (ஏபிஎஸ்எஸ்) பொதுச் செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ் அமைப்பு ஒன்றும் கலாசார அமைப்பு அல்ல. மதம் என்று வரும்போது, மத குருக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் எதை முடிவு செய்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். மோகன் பகவத்தின் கருத்து திருப்திப்படுத்தும் அரசியல் கருத்து; இந்து மதம் பற்றி அவருக்கு அதிகம் தெரியாது. மத அமைப்புகள் மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுகின்றன; அரசியல் கட்சிகளின் அடிப்படையில் செயல்படுவது அல்ல’ என்று கூறினார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறிய கருத்துக்கு, மதத் தலைவர்களும் மத அமைப்புகளும் இவ்வளவு கடுமையாக பதிலளிப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1991ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உ.பி-யில் வெடித்த கலவரம்
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 46 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டிருந்த பழமையான ‘பஸ்ம சங்கா்’ ( கார்த்திக் மகாதேவ்) கோயில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கடந்த 13ம் தேதி மீண்டும் பூஜை செய்து கோயில் திறக்கப்பட்டது. கக்கு சராய் பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயில் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. அதே பகுதியில் உள்ள கல்கி விஷ்ணு கோயிலில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்தக் கோயில் கடந்த மாதம் கலவரம் ஏற்பட்ட முகலாயர் காலத்தைச் சேர்ந்த ஷாஹி ஜாமா மசூதி இருக்கும் பகுதிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளது.

தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வு குறித்து சம்பல் மாவட்ட துணை ஆட்சியர் வந்தனா மிஸ்ரா கூறும்போது, ‘கல்கி விஷ்ணு கோயிலில் உள்ள பழமையான கிணறு குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர். அந்தக் கிணறு அமைக்கப்பட்ட காலம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை’ என்றார். உத்தரபிரதேச மாநிலத்தில் மத வழிபாட்டு தலங்களை, குறிப்பாக மசூதிகள் மீட்பதற்காகப் தொடரப்பட்ட வழக்குகளில் இடைக்கால மற்றும் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், புதிய வழக்குகளைத் தொடரவும் உச்ச நீதிமன்றம் கடந்த 12ம் தேதி தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post மத வழிபாட்டுத் தலங்களை குறிவைப்பதால் பதற்றம்; ஆர்எஸ்எஸ் – சாமியார்கள் அமைப்பு இடையே மோதல்: அயோத்தி ராமர் கோயில் குறித்து கூறிய கருத்தால் சர்ச்சை appeared first on Dinakaran.

Related Stories: