செய்யாறு, டிச.21: செய்யாறு அருகே பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவத்தில் அவரது கணவரான பால் வியாபாரி கைது செய்யப்பட்டார். பெற்றோரை பராமரிப்பது குறித்த தகராறில் இந்த சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா வெள்ளாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(45), பால் வியாபாரி. இவரது மனைவி உமாராணி(38). திருமணமாகி 17 ஆண்டுகளாகிறது. அபினேஷ்(14), விமல்(13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி வீட்டில் மயங்கி விழுந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உமாராணி உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் தூசி எஸ்ஐ சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். இதற்கிடையில் உமாராணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், உமாராணி தாக்குதலுக்கு உள்ளாகி இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதில், உமாராணியின் கணவர் பெருமாள், மனைவியை அடித்ததால் அவர் இறந்துவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பெருமாளை கைது செய்து, நேற்று காலை செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கைதான பெருமாள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது: உடல்நிலை சரியில்லாமல் அதேபகுதியில் உள்ள எனது சகோதரர் வீட்டில் தங்கியிருக்கும் என் பெற்றோரை, வீட்டில் எங்களுடன் தங்க வைத்து மருத்துவம் பார்க்கலாம் என மனைவியிடம் கடந்த சில வாரங்களாக கூறி வந்தேன். ஆனால் அதற்கு எனது மனைவி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. அதேபோல் கடந்த 18ம் தேதி மதியம், ‘வயதான காலத்தில் பெற்றோரை பராமரிப்பது நமது கடமை, எனவே அவரை அழைத்து வரலாம்’ என எனது மனைவியிடம் மீண்டும் கூறினேன்.
இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரை அடித்தேன். இதில் நிலை தடுமாறிய அவர் கட்டில் மீது விழுந்தார். அப்போது கட்டில் ஓரமுள்ள தடுப்பு முகத்தில் பட்டதால் ரத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். டாக்டர்கள் பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எனது பெற்றோரை வீட்டில் சேர்க்க மாட்டேன் எனக்கூறியதால்தான் கோபத்தில் அடித்தேன். அவர் கட்டில் மீது விழுந்ததால் அடிபட்டு இறந்தார். அவரை கொலை செய்யும் நோக்கமில்லை என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
The post மனைவியை அடித்துக்கொன்று நாடகமாடிய கணவன் கைது பெற்றோரை பராமரிக்கும் தகராறில் சம்பவம் செய்யாறு அருகே மயங்கி இறந்த வழக்கில் திருப்பம் appeared first on Dinakaran.