திருவண்ணாமலை, டிச.18: திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. மேலும், மலை மீது மகாதீபம் 5வது நாளாக காட்சியளித்தது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளித் தேரோட்டம் 9ம் தேதியும், மகா தேரோட்டம் 10ம் தேதியும் நடந்தது.
கடந்த 13ம் தேதி மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலைமீது மகாதீபம் ஏற்றப்பட்டது. விழாவில், சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, கார்த்திகை மாத பவுர்ணமி கிரவலத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தீபத்திருவிழாவின் தொடக்கமாக 3 நாட்கள் எல்லை தெய்வ வழிபாடு, அதைத்தொடர்ந்து 10 நாட்கள் தீபத்திருவிழா உற்சவம் மற்றும் தீபத்திருவிழா நிறைவாக 3 நாட்கள் தெப்பல் உற்சவம் என கடந்த 1ம் தேதி முதல் திருவண்ணாமலை விழாக்கோலமாகவே காட்சியளித்தது. கார்த்திகை தீபத்திருவிழா மரபுபடி, விழாவின் நிறைவாக பஞ்சமூர்த்திகளில் ஒருவராக அருள் தரும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நேற்று இரவு நடந்தது.
அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடந்தது. நேற்று இரவு 9 மணியளவில் சண்டிகேஸ்வரர் அலங்கார ரூபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்ேபாது, ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். மேலும், கடந்த 13ம் தேதி மாலை 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 5வது நாளாக நேற்று காட்சியளித்தது. நேற்று மாலை 6 மணிக்கு வழக்கம்போல மலை மீது தீபம் ஏற்றப்பட்டது. மலை மீது மகாதீபம் தொடர்ந்து வரும் 23ம் தேதி வரை காட்சியளிக்கும்.
The post திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவாக சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி appeared first on Dinakaran.