மலை மீது தீபமாக காட்சி தரும் அண்ணாமலையார் கிரிவலம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை, டிச.16: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக, கடந்த 13ம் தேதி மாலை 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத பரம்பொருள், ஜோதிப்பிழம்பாக எழுந்தருளிய அருட்காட்சியை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.இந்நிலையில், மகா தீபத்திருவிழாவின்போது மலை மீது ஜோதிப்பிழம்பாக காட்சியளிக்கும் அண்ணாமலையார் 14 கிமீ தூரம் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் அலங்கார ரூபத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் எழுந்தருளி கிரிவலம் சென்றார்.

ேமலும், பஞ்சமூர்த்திகளில் ஒருவரான பராசக்தி அம்மனும், நகர எல்லை காவல் தெய்வமான துர்க்கையம்மனும் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி உடன் கிரிவலம் சென்றனர். அதோடு, அடி அண்ணாமலை திருக்கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகளும் சுவாமியுடன் கிரிவலம் சென்றனர். மலை மீது மகாதீபம் காட்சியளிக்கும் நாளில் அண்ணாமலையார் கிரிவலம் செல்வதை தரிசனம் செய்ய, கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். மேலும், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் சுவாமிக்கு மண்டகப்படி செலுத்தப்பட்டது. நேற்று காலை தொடங்கிய அண்ணாமலையார் கிரிவலம் மாலை 3 மணியளவில் கோயிலில் நிறைவடைந்தது. கிரிவலம் முடிந்து கோயிலுக்கு திரும்பிய சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. திருவண்ணாமலையில் மலையே மகேசன் என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை வலம் வந்து வழிபடுகின்றனர். இத்தகு சிறப்பு மிக்க தீபமலையை, அண்ணாமலையாரே ஆண்டுக்கு 2 முறை வலம் வருவது சிறப்பாகும். அதன்படி, தை மாதம் 5ம் நாள் திருவூடல் முடிந்த மறுதினமும், கார்த்திகை மாதம் மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு தெப்பல் உற்சவத்தின் 2வது நாளிலும் அண்ணாமலையார் கிரிவலம் சென்று அருள்பாலிக்கிறார்.

The post மலை மீது தீபமாக காட்சி தரும் அண்ணாமலையார் கிரிவலம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: