கலசப்பாக்கம், டிச.16: கலசப்பாக்கம் அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட லாரி டிரைவர் 9 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டை சேர்ந்தவர் வெங்கடேசன்(53). லாரி டிரைவர். இவர் கடந்த 6ம் தேதி தனது கிராமத்திலிருந்து கலசப்பாக்கத்திற்கு வந்தவர் அங்கு டீக்கடையில் டீ அருந்திவிட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அவர் செய்யாற்று வெள்ளத்தில் இறங்கி நடந்து சென்றார். ஆற்றின் நடுவே திடீரென அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தொடர்ந்து 3 நாட்களாக போளூர் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் தங்கள் முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் போளூர் அடுத்த மண்டகொளத்தூர் செய்யாற்றங்கரையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலசப்பாக்கம் போலீசார் விரைந்து சென்று சடலத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து வெங்கடேசன் உறவினர்களை வைத்து அது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வெங்கடேசன் சடலம்தான் என்று உறுதி செய்யப்பட்டது. இறந்த லாரி டிரைவர் வெங்கடேசனுக்கு பிரியா என்ற மனைவியும், கோகுல்ராஜ், கணபதி என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வெங்கடேசன் மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் கலசப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கலசப்பாக்கம் அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட லாரி டிரைவர் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.