காதல் மனைவியை தாக்கி சுவற்றில் மோதி கொலை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு வரதட்சணை கேட்டு சித்ரவதை

திருவண்ணாமலை, டிச.17: திருவண்ணாமலையில் வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்தி மனைவியை தாக்கி கொலை செய்த கணவர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த ராஜந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சிவா(30). இவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராக வேலை செய்து வருகிறார். அவரது மனைவி திவ்யா(25). இருவரும் காதலித்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணம் ஆனதில் இருந்து வரதட்சணை கேட்டு மனைவியை, சிவா கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், சமீபத்தில் தாய் வீட்டுக்கு திவ்யா சென்றுவிட்டார். பின்னர், அவரை சமாதானம் செய்து சிவா அழைத்து வந்தார். இருவரும் திருவண்ணாமலை வேங்கிகால் மின் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி மனைவியிடம் வரதட்சணை கேட்டு மீண்டும் சிவா தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த சிவா, மனைவி திவ்யாவை தாக்கி, கீழே பிடித்து தள்ளியுள்ளார்.

அப்போது, சுவற்றில் திவ்யாவின் தலை மோதியதில் படுகாயம் அடைந்தார். உடனடியாக, திவ்யாவை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை- வேட்டவலம் சாலை திருவள்ளூர் நகரில் வசித்து வரும் திவ்யாவின் தாய் உமாமகேஸ்வரி, திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கணவர் சிவா மற்றும் அவரது தாய் வசந்தா, அண்ணன் பாபு, தங்கை பொன்னி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால், இதுதொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

The post காதல் மனைவியை தாக்கி சுவற்றில் மோதி கொலை கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு வரதட்சணை கேட்டு சித்ரவதை appeared first on Dinakaran.

Related Stories: